கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.






இந்த அமைப்பு மத்திய அரசால் கடந்த செப்டம்பர் மாதத்தில் தடை செய்யப்பட்டது. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா பல்வேறு தீவிரவாத செயலில் ஈடுபட்டதாகவும், பலரது கொலை சம்பவத்தில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் கூறி இந்த அமைப்பை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்தது. இந்த அமைப்பில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.


பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் 2-ம் நிலை தலைவர்களை குறிவைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கேரளாவில் இன்று மொத்தம் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் 6 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கேரள காவல்துறையின் உதவியோடு இந்த சோதனை நடைபெறுகிறது. இதில் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.


அதேபோல ஆலப்புலா, மலப்புரம் மாவட்டங்களில் தலா 4 இடங்களிலும், திருவனந்தபுரம், பத்தினம் திட்டா மாவட்டங்களில் தலா 3 இடங்களிலும், கொல்லம், கோழிக்கோடு மாவட்டங்களில் தலா இரண்டு இடங்களிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.


சஞ்சித் (கேரளா, நவம்பர் 2021), வி. ராமலிங்கம் (தமிழ்நாடு,2021), நந்து (கேரளா,2021), அபிமன்யூ (கேரளா, 2018), பிபின் (கேரளா, 2017), ருத்ரேஷ்-ஷரத் (கமடக), பிரவீன் புயாரி (கர்நாடக 2016), சசி குமார் (தமிழ்நாடு, 2016) ஆகியோரின் கொலையில் சம்மந்தப்பட்ட நபர்கள் அனைவரும் இந்த அமைப்பை சேர்ந்தவர்களாகும். இவர்களை தேடியும் இந்த சோதனை நடைபெறிகிறது.


மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்பு மக்களின் அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறியிருந்தது. ஒரு சில நிர்வாகிகள் ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தஞ்சம் புகுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு சிலர் காவல் துறை மற்றும் மத்திய அரசின் ஏஜென்சிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.