பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காலி ரயில் பெட்டியில் நடந்த கொடுமை:

இதற்கிடையே, கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ஹரியானாவின் பானிபட் நகரில் கடந்த ஜூன் 24ஆம் தேதி பெண் ஒருவர் ரயில் பெட்டியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரயில் பாதையில் தூக்கி வீசப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை கிளப்பியது. இதை தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளது.

கதறிய பெண்!

இந்த ஊடகத் தகவல் உண்மையாக இருப்பின் அது மனித உரிமைகள் மீறல் தொடர்பாக கடும் பிரச்னைகளை எழுப்புவதாக இருக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக  இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ரயில்வே வாரிய தலைவர், ரயில்வே அமைச்சகம் மற்றும் ஹரியானா காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் அதிகாரிகள் அவருக்கு வழங்கிய இழப்பீடு குறித்தும் அந்த அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.