இந்தியாவில் உணவுப் பழக்கம் தொடர்பான விவாதங்களில் எத்தனை பேர் சைவ உணவையும், இறைச்சி உணவையும் உண்கிறார்கள் என்ற பொருள் இடம்பெறும். சமீபத்திய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, முன்பைவிட அதிகம் பேர் தற்போது இறைச்சி உணவு உண்கிறார்கள் என்பதும், கடந்த 2015-16ஆம் ஆண்டுக்கும், தற்போதைய 2019-21ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலகட்டத்தில் இறைச்சி உண்ணும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் வெளியான தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, 15 முதல் 49 வயது வரையிலான ஆண்களில் இதுவரை மீன், கோழி, ஆடு முதலான எந்த இறைச்சியையும் உண்டதில்லை என்று சுமார் 16.6 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். கடந்த 2015-16ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் போது 21.6 சதவிகிதமாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. எனினும் இதே கணக்கெடுப்பில் பெண்களில் இறைச்சி உண்ணாதவர்களின் எண்ணிக்கை கடந்த 2015-16ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் போது 29.9 சதவிகிதம் என்றும், தற்போதைய 2019-21ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் 29.4 சதவிகிதம் என்றும் தெரிய வந்துள்ளது.
இறைச்சி உணவை உண்பவர்கள் என்ற எண்ணிக்கையில் நாடு முழுவதும் 15 முதல் 49 வரையிலானோரின் கணக்கெடுப்பில் சுமார் 83.4 சதவிகித ஆண்களும், 70.6 சதவிகிதப் பெண்களும் இறைச்சி உண்பதாக தெரிய வந்துள்ளது.
வாராந்திர அடிப்படையில் இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் இந்தக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தற்போதைய ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளில் சுமார் 57.3 சதவிகித ஆண்களும், 45.1 சதவிகிதப் பெண்களும் வாரத்தில் ஒருமுறையாவது இறைச்சி உண்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2015-16ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் போது, ஆண்களில் 48.9 சதவிகிதம் என்றும், பெண்களில் 42.8 சதவிகிதம் என்றும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தக் கணக்கெடுப்பின்படி, இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக லட்சத்தீவுகளில் 98.4 சதவிகிதம் பேர் என்ற அளவிலும், குறைந்த பட்சமாக 14.1 சதவிகிதம் என்ற அளவில் ராஜஸ்தான் மாநிலத்திலும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், லட்சத்தீவுகளுக்கு அடுத்தடுத்த இடங்களில் 96.1 சதவிகிதம் பேருடன் அந்தமான் நிகோபார் தீவுகள், 93.8 சதவிகிதம் பேருடன் கோவா, 90.1 சதவிகிதம் பேருடன் கேரளா, 89.9 சதவிகிதம் பேருடன் புதுச்சேரி ஆகியவை டாப் 5 மாநிலங்களாக பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இறைச்சி உண்பவர்கள் மிகக் குறைவாக உள்ள டாப் 5 மாநிலங்களாக, 13.4 சதவிகிதம் பேர் வாழும் ஹரியானா, 17 சதவிகிதம் பேர் வாழும் பஞ்சாப். 17.9 சதவிகிதம் பேர் வாழும் குஜராத், 21.1 சதவிகிதம் பேர் வாழும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தற்போதைய ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 30 வரை, 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் 707 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரே ஆண்டில் எடுக்கப்படும் இந்தக் கணக்கெடுப்பு கொரோனா தொற்று காரணமாக இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது.