தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில், 6,000 கி.மீ.,க்கு மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 24 சுங்கச் சாவடிகளில், இன்று நள்ளிரவு (ஏப்ரல் 1 ஆம் தேதி)முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வு பட்டியலில், திண்டிவனம் - ஆத்துார், போகலுார், பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலுார், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி,மாத்துார், நல்லுார், நாங்குனேரி, ஸ்ரீபெரும்புதுார், பள்ளிக்கொண்டா, பரனுார், பட்டரை பெரும்புதுார், புதுக்கோட்டை - வாகைகுளம், எஸ்.வி.புரம், சாலைபுதுார், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன.இந்த சுங்கச்சாவடிகளில், ஒரு முறை பயணிப்பதற்கு 5 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்க உள்ளது,
இந்த 24 சுங்கச் சாவடிகளில் 10 சதவீதம் வரை விலை உயர்த்தப்படுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரம் ராஜா கூறுகையில், “சுங்கச்சாவடி கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகள், காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் போன்ற பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். இதனால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதுவரை 1,000 ரூபாய் சுங்கக் கட்டணமாகச் செலவழித்து வந்த வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள், இனி 1,200-1,250 ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பொருளின் மீது ரூபாய் 200-250 உயத்தப்பட வாய்ப்பு இருக்கிறது” என்றார் அவர்.
22 சுங்கச்சாவடிகளில் கார்கள், வேன்கள் மற்றும் ஜீப்புகளுக்கான கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டாலும், சென்னை-தடா/கொல்கத்தா NH 5ல் உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் 40 சதவீதமும், சென்னை புறவழிச்சாலையில் உள்ள சூரப்பட்டு டோல்கேட்டில் 16 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை துறையின் அதிகாரி இது குறித்து கூறுகையில், “கார்/ஜீப்புகளுக்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.70 ஆக உயர்த்தப்படும். அதேபோல, 3 ஆக்சில் லாரிகளுக்கு ரூ.195க்கு பதிலாக ரூ.265 செலுத்த வேண்டும். இருப்பினும், நெமிலி (ஸ்ரீபெரும்புதூர்) மற்றும் சென்னசமுத்திரம் (வாலாஜா) ஆகிய இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை-பெங்களூரு புறவழிச்சாலையில் சுங்கச்சாவடிகள் அதிகரிக்கப்படாது” எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுங்கச் சாவடிகளில் பயனர் கட்டணம் கடைசியாக ஏப்ரல் 1, 2020 அன்று திருத்தப்பட்டது, ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், 2020 டிசம்பரில், மதுரவாயல் மற்றும் வாலாஜா இடையே தேசிய நெடுஞ்சாலை துறையின் மோசமான பராமரிப்பைக் காரணம் காட்டி இரண்டு சுங்கச்சாவடிகளில் பயனர் கட்டணத்தை 50 சதவீதமாத குறைத்தது. சில மாதங்களுக்கு முன்பு, அந்த சுங்கச் சாவடியில் முழு கட்டணத்தையும் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.