மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து சுதந்திரமான ஊடக நிறுவனங்களை செயல்பட விடாமல் தடுப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மத்திய அரசை விமர்சிக்கும் கட்டுரைகளை வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கை:
கடந்தாண்டு தி வயர் நிறுவனத்தின் ஆசிரியர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சமீபத்தில், புகழ்பெற்ற பிபிசி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய பத்திரிகையாளர்கள் வீட்டில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு சோதனை நடத்தி பலரை கைது செய்தது.
இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீனாவின் செல்வாக்கை பெருக்கும் நோக்கில் அந்நாட்டிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு செயல்பட்ட குற்றச்சாட்டில் நியூஸ்கிளிக் நிறுவனத்தின் நிறுவனரை கைது செய்ததாக டெல்லி காவல்துறை விளக்கம் அளித்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதலே, நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை, டெல்லி காவல்துறை மற்றும் வருமான வரித்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை நடத்தி வந்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட சோதனைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கைக்கும் பல செய்தி நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய பத்திரிகையாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு:
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இந்திய பத்திரிகையாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்த எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலைமை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல், "சீன அரசாங்கத்திடம் தொடர்பு இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையில் கருத்து கூற முடியாது.
ஆனால், ஊடகங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்து கொண்டதை கூறி கொள்ள விரும்புகிறேன். பத்திரிகையாளர்களின் மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் குறித்து இந்திய அரசிடமிடமும் மற்ற நாடுகளிடமும் அமெரிக்க அரசு விவாதித்திருக்கிறது.
துடிப்பான மற்றும் சுதந்திரமான ஜனநாயகத்தில் சமூக ஊடகங்கள் உட்பட உலகளவில் ஊடகங்களின் வலுவான பங்கை அமெரிக்க அரசாங்கம் வலுவாக ஆதரிக்கிறது" என்றார். சீனாவிடம் பணம் பெற்று கொண்டு கொண்டு நியூஸ்கிளிக் செய்தி இணையதளம் இயங்கியதாக புகழ்பெற்ற தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை அந்நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது.
கடந்த காலங்களில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பல முறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பத்திரிகையாளர்களின் உரிமைகள் குறித்து விவாதித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்திய பிரதமர் மோடியிடம் ஜனநாயக உரிமைகள் குறித்து விவாதித்துள்ளார்.
இதையும் படிக்க: ODI World Cup 2023: இன்னும் சில மணிநேரத்தில் உலகக்கோப்பை போட்டிகள் உங்கள் முன்.. தெரியவேண்டிய A - Z விஷயங்கள்!