உலகக் கோப்பை 2023 தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியானது மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இது 13வது ஒருநாள் உலகக் கோப்பை போட்டியாகும்.  இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டி பல்வேறு நகரங்களில் உள்ள 10 ஸ்டேடியங்களில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர்பான A to Z விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...


1. எத்தனை அணிகள் பங்கேற்கின்றன?


இம்முறை உலகக் கோப்பையில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.


2. எத்தனை போட்டிகள் விளையாடப்படும் மற்றும் விளையாடும் வடிவம் என்ன?


உலகக் கோப்பையில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் ரவுண்ட் ராபின் போட்டிகள் நடக்கும். அதாவது, ஒரு அணி மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். அதிக புள்ளிகள் பெறும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இரண்டு அரையிறுதிப் போட்டிகளில் மோதி வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.


3. போட்டிகள் எப்போது, ​​எவ்வளவு நேரம் நடைபெறும்?


உலகக் கோப்பை போட்டிகள் அக்டோபர் 5ஆம் தேதி (இன்று) முதல் தொடங்கி, இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. அதாவது மொத்தம் 46 நாட்களுக்கு இந்தப் போட்டி நடைபெற இருக்கிறது. அனைத்து போட்டிகளுக்கும் இரண்டு நேர அட்டவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பகல் போட்டியானது காலை 10.30 மணிக்கும், பகல்-இரவு போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும்.


4. எந்தெந்த மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்?


இந்தியாவின் 10 நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. அதன்படி அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் தர்மஷாலா ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. 


5. லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் டெலிகாஸ்ட்களை எங்கு பார்க்கலாம்?


உலகக் கோப்பை 2023 போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை Disney + Hotstar இல் காணலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை டிவியில் பார்க்கலாம்.


6. ரிசர்வ் டே நாட்கள் உண்டா..?


அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் மழை பெய்தால் அடுத்த நாளில் போட்டி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். 


7. இந்த உலகக் கோப்பையில் என்ன வித்தியாசம்..?


இந்த உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தமாக 10 அணிகள் களமிறங்குகின்றன. முதல் இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இம்முறை உலகக் கோப்பையில் இடம்பெறவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம். இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் அணியால் தகுதி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


8. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது?


இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதேசமயம், அரையிறுதிப் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்திலும், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெறும்.


9. இந்தியா-பாகிஸ்தான் மோதல் எப்போது, ​​எங்கு நடக்கும்?


இந்த மாபெரும் ஆட்டம் அக்டோபர் 14ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது .


10. இந்த முறை ஹோஸ்டிங் செய்வதில் உள்ள தனிச்சிறப்பு என்ன?


ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா தனியாக நடத்துவது இதுவே முதல் முறை . இதற்கு முன் 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில், இந்தியா தெற்காசிய நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பையை நடத்தியது.