புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மதுபான விற்பனைக்கு தடை விதித்துள்ளது.


புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை. இரு தவணை டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதியில்லை. பிரபலங்கள் பொதுஇடங்களில் பங்கேற்கக் கூடாது. தனி இடங்களில் பங்கேற்றுக் கொள்ளலாம். புதுச்சேரி அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நிபந்தனைகளை முறையாக அமல்படுத்துவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறினார்.


மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு 


டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்றும், மதுபானக் கடைகள், பார்கள், விடுதிகள் என எந்த இடங்களில் மதுபான விற்பனை கூடாது என்றும், பொது இடங்களில் மது அருந்தக் கூடாது, விடுதிகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் தங்கிக் கொள்ளலாம் எனவும் கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையில் டிசம்பர் 31 ம் தேதி இரவு மற்றும் ஆங்கில புத்தாண்டு அன்று கொண்டாட தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது. கடற்கரையில்  புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லாததால் அவரவர் வீட்டிலையே கொண்டாட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இதுகுறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவிக்கையில், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக்கூடாது எனவும், மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார். மேலும், புத்தாண்டில் தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து டிசம்பர் 31 ம் தேதி முதல் அடுத்த நாள் அதிகாலை வரை பொதுமக்கள் ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அன்று இரவு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தால் காவல்துறையினர் மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 


அதேபோல், டிசம்பர் 31 ம் தேதி நீண்ட தூரம் பயணிப்போர் இருசக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என்றும், கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வோர் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்தி பயணம் செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 


பொதுமக்கள் அனைவரும் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண