’எங்களுக்கு ஒரு கோடி பேர் ஓட்டுப் போடுங்கப்பா..உங்களுக்கு 70 ரூபாயில் தரமான சாராயம் தரோம்’ என ஆந்திர பாரதிய ஜனதா தலைவர் சோமு வீரராஜூ கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் அண்மையில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தங்களது கட்சி ஆந்திராவில் வெற்றி பெரும் நிலையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும் மேலும் கஜானாவில் கூடுதல் பணம் இருந்தால் ரூ 50க்குக் கூட சாராயம் விற்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். ’பணம் இருந்தால் பாக்கெட் உண்டு’ என அவர் வெளிப்படையாக வாக்குறுதி அளித்ததை அடுத்து ’குடி’மக்கள் இதையடுத்து ‘மனமிருந்தால் மார்கபந்து’ என அவரது அறிவிப்புக்குச் ’சியர்ஸ்’ செய்து வருகின்றனர். அங்கே தற்போது ஒரு பாட்டில் தொடக்க விலையாக ரூ 200க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது டிசம்பர் 19ல் ஆந்திர அரசு மதுபான விலையை சுமார் 15-20 சதவிகிதம் வரை குறைத்ததற்குப் பிறகான விலை. 






மேலும் பொதுக்கூட்டத்தில் பேசிய வீரராஜூ, மாநில அரசு போலி மதுபானங்களை அதிகவிலைக்கு விற்று வருவதாகவும். ஒருவர் சராசரியாக இதனால் 12000 ரூபாய் வரை மதுபானத்தில் செலவிட வேண்டி இருப்பதாகவும் இது. போதாக்குறைக்கு இந்த மதுபானங்கள் அரசுக்கு ஆதரவானவர்கள் ஆலையிலிருந்துதான் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். 


 






அண்டை மாநிலமான தெலங்கானாவும் இதுபோன்ற அறிவிப்புகளுக்குச் சளைத்ததல்ல. வருகின்ற 31 டிசம்பர் ஆண்டு இறுதி தினக் கொண்டாட்டத்தை ஒட்டி அந்த மாநில அரசு அதன் மதுபானக் கடைகள் கூடுதல் நேரத்துக்குத் திறந்துவைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.