தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், MDR-TB வகை காசநோய்க்கான புதிய சிகிச்சை முறைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 


காசநோய்க்கு புதிய சிகிச்சை முறை:


நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ், காசநோயை ஒழிப்பதற்கான உலகளாவிய இலக்குக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2025-க்குள் காசநோயிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன் கீழ், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புது சிகிச்சை முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 


BPaLM ஒழுங்கு முறையை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையின் கீழ் புதிய காசநோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்படும். அதாவது பெடாகுலைன் & லைன்சோலிட் (மோக்ஸிஃப்ளோக்சசினுடன்/இல்லாமல்) உடன் இணைந்து ப்ரெட்டோமானிட் வழங்கப்படும்.


Bedaquiline, Pretomanid, Linezolid மற்றும் Moxifloxacin ஆகிய நான்கு மருந்து கலவையைக் கொண்ட BPaLM சிகிச்சை முறை, முந்தைய சிகிச்சை முறையை விட பாதுகாப்பானது. மிகவும் பயனுள்ளது என்பதுடன் விரைவான சிகிச்சை முறை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஆறு மாதங்களில் குணப்படுத்த முடியும்:


பாரம்பரிய எம்.டி.ஆர்-காசநோய் சிகிச்சைகள் கடுமையான பக்க விளைவுகளுடன் 20 மாதங்கள் வரை நீடிக்கும் என்றாலும், பிபாஎல்எம் சிகிச்சைமுறை அதிக சிகிச்சை வெற்றி விகிதத்துடன் ஆறு மாதங்களில் மருந்து எதிர்ப்பு காசநோயை குணப்படுத்த முடியும்.


இந்தியாவின் 75,000 மருந்து எதிர்ப்பு காசநோய் நோயாளிகள் இப்போது இந்தக் குறுகிய கால சிகிச்சையின் பலனைப் பெற முடியும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, சுகாதார ஆராய்ச்சித் துறையுடன் கலந்தாலோசித்து, இந்த புதிய காசநோய் சிகிச்சை முறையை அங்கீகரித்துள்ளது.


இது உள்நாட்டு நிபுணர்களால் ஆதாரங்களை முழுமையாக மதிப்பாய்வு செய்து, இந்த எம்டிஆர் சிகிச்சை முறை பாதுகாப்பானது மற்றும் செலவு குறைந்தது என்பதை உறுதி செய்வதற்காக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சுகாதார ஆராய்ச்சித் துறையின் மூலம் சுகாதார தொழில்நுட்ப அங்கீகாரத்தை பெற்றுள்ளது.


மத்திய அரசின் இந்த நடவடிக்கை, காசநோயை ஒழிக்க வேண்டும் என்ற தேசிய இலக்கை அடைவதற்கான நாட்டின் முன்னேற்றத்தை கணிசமாக ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து, மத்திய காசநோய் பிரிவு, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து, பிபிஏஎல்எம் திட்டமுறையை நாடு தழுவிய காலக்கெடுவுக்குள் செயல்படுத்தும் திட்டத்தை தயாரித்து வருகிறது.