ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளப்பாதிப்பு பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, பாலத்தில் வேகமாக வந்த ரயில் கிட்டத்தட்ட அவரை உரசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சந்திரபாபு நாயுடுவை உரசி சென்ற ரயில்:


கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி, விஜயவாடாவில் உள்ள ஒரு சிறிய பாலத்தில் இருந்து வெள்ளப்பாதிப்பு பணிகளை சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், பாலத்தின் மேல் குறுகிய நடைமேடையில் தண்டவாளத்தின் அருகே அவர் நின்று கொண்டிருந்தபோது, ​​ஒரு ரயில் அவரை கிட்டத்தட்ட உரசி சென்றது.


இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தனது பாதுகாப்புக் குழு மற்றும் பிற அதிகாரிகளுடன் ரயில் கடந்து செல்லும் போது பாலத்தின் தண்டவாளத்தில் சந்திரபாபு நாயுடு நிற்பதைக் காணலாம். அதிவேகமாக வந்த ரயிலில் இருந்த பயணிகள் பாலத்தின் தண்டவாளத்தில் நின்றிருந்த முதலமைச்சரை நோக்கி கையசைத்து சென்றதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.


ஆந்திர மாநிலத்தை உலுக்கி எடுத்த கனமழை:


கனமழையால் ஆந்திராவின் விஜயவாடா உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 32 பேர் உயிரிழந்தனர். மேலும், தாழ்வான பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 40,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


விஜயவாடாவை உள்ளடக்கிய என்டிஆர் மாவட்டம், வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 24 பேர் மரணம் அடைந்தனர். என்டிஆர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக குண்டூரில் ஏழு பேரும், பல்நாடு மாவட்டத்தில் ஒருவரும் இறந்துள்ளனர்.


 






தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ஆந்திர மாநிலம் முழுவதும் 2.35 லட்சம் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். இந்த சூழலில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வெள்ள நிவாரணத்திற்காக 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இந்தத் தொகையில் 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.1 லட்சம் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது.   


இதையும் படிக்க: Watch Video: எனக்கே சாப்பாடு இல்லையா? ஓட்டலுக்குள் லாரியை விட்ட ஓட்டுனர் - வீடியோ வைரல்