New Traffic Rules: போக்குவரத்து விதிகளை மீறியதாக விதிக்கப்பட்ட அபராதங்களை, பொதுமக்கள் செலுத்தாமல் இழுத்தடிப்பதால் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.
போக்குவரத்து அபராதங்கள்:
இன்று முதல் தொடங்கியுள்ள 2025-26 நிதியாண்டில் கடுமையான போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஓட்டுநர் உரிமங்கள் கூட தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம்.
யார் யாருக்கு லைசென்ஸ் ரத்து?
புதிய விதிகளின்படி, மூன்று மாதங்களுக்கும் மேலாக இ-சலான்களுக்காக அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், ஓட்டுநர் உரிமங்கள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படலாம். ஒரு நிதியாண்டிற்குள் சிவப்பு விளக்கு மீறல்கள் அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக ஒருவர் மூன்று சலான்களைப் பெற்றால், அது மூன்று மாத உரிமம் இடைநிறுத்தப்பட வழிவகுக்கும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.
அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை, இ-சலான்களின் குறைந்த வசூல் விகிதங்கள் காரணமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அபராதங்களில் 40 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
அரசு முடிவு
அபராதம் தொடர்பான தாமதமான அறிவிப்புகள் அல்லது பிழைகள் காரணமாக சில அபராதங்கள் செலுத்தப்படாமல் போகலாம் என்பதை அரசு அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களுக்கான குறைந்தபட்ச விவரக்குறிப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள அபராதங்கள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு மாதாந்திர எச்சரிக்கைகளை சரியாக சேர்ப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கட்டணத்தை செலுத்தாத மாநிலங்கள்:
புள்ளிவிவரங்கள் வாரியாக, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா முறையே 62 மற்றும் 76 சதவீதத்துடன், இ-சலான் கட்டண வசூலில் முன்னிலை வகிக்கின்றன. அதேநேரம், இ-சலான் அபராத வசூலில் டெல்லி தற்போது வெறும் 14 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகா 21 சதவீதமாகவும் , தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் 27 சதவீதமாகவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இ-சலான்கள்:
2025ம் ஆண்டு தொடக்கம் வரை நாடு முழுவதும் 31 கோடியே 10 லட்சம் இ-சலான்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 40 ஆயிரத்து 548 கோடி ரூபாய் ஆகும். ஆனால் அதில் 40 சதவிகிதம் அதாவது 16 ஆயிரத்து 324 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 ஆயிரத்து 224 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் உள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 875 கோடி ரூபாய் மதிப்பிலான 6 கோடியே 90 லட்சம் இ-சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆயிரத்து 25 கோடி ரூபாய் மதிப்பிலான இ-சலான்களுகான அபராதங்கள் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளன.
இந்திய சாலை விபத்துகள்:
அண்மையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட அறிக்கையில், “உலகளவில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகளைப் பதிவு செய்கிறது. இது கவலைக்குரிய விஷயம்" என்று குறிப்பிட்டார். இதனிடையே, ஆண்டிற்கு இந்தியாவில் சுமார் 480,000 சாலை விபத்துகள் ஏற்படுவதாகம், இதன் விளைவாக 180,000 பேர் வரை உயிரிழப்பதகாவும், சுமார் 400,000 பேர் படுகாயமடைவதாகவும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த இறப்புகளில் 140,000 இறப்புகள் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்களிடையே நிகழ்வதாகவும், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த விபத்துக்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு சமமான பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. இந்த மோசமான விளைவுகளை கட்டுப்படுத்தவே, சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.