இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் திறந்து வைக்க உள்ளார். புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்:
பாஜக அரசாங்கம் இந்த மாதத்துடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்வதால், மே 28ஆம் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 2014ஆம் ஆண்டு, மே 26ஆம் தேதி, மோடி பிரதமராக பதவியேற்றார். 1,224 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை காட்சிப்படுத்த நாடாளுமன்றத்தில் பெரிய அரசியலமைப்பு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர, உணவு வழங்கும் பகுதி, போதுமான வாகன நிறுத்துமிடத்தை புதிய நாடாளுமன்றம் கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் சிறப்பம்சங்கள்:
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள ஊழியர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட உள்ளது. இது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள் (NIFT) மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்மா துவார் என அதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான தனித்தனி நுழைவாயில்கள் உள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ஒன்பது ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் பொதுக்கூட்டம்:
வரும் மே 30ஆம் தேதி, பிரமாண்ட பேரணியுடன் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த நாள் மே 31ஆம் தேதி, பிரதமரின் இரண்டாவது பேரணி நடைபெறும். நாடு முழுவதும் பாஜக மூத்த தலைவர்களின் 51 பேரணிகளை நடத்த பாஜக திட்டமிடப்பட்டுள்ளது.
இதை தவிர, 396 மக்களவைத் தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பாஜகவின் முதலமைச்சர், பாஜகவை சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் அழைக்கப்படுவார்கள்.
தற்போதுள்ள மக்களவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் நிறைவு பெற உள்ளதால், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக தனித்து ஆட்சி அமைத்திருப்பதால், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.