தேசிய அளவில் நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி வாயிலாக பங்கேற்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 


மத்தியில் பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசு மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகள், இளைஞர் நலன்களை ஊக்குவிப்பதில் மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. 


அதன் ஒரு பகுதியாக சர்வதேச நிதி அமைப்புகள் இந்தியாவில் 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 9 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு பல திட்டமிடல்களை உருவாக்கி வருகிறது. அதன்படி கடந்தாண்டு ஜூன் மாதம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார். சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பது தெரிய வந்ததால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார். 


இதன்பின்னர் ரோஜ்கார் மேளா திட்டம் (வேலை வாய்ப்பு திருவிழா) கடந்தாண்டு அக்டோபர் 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி 20 ஆம் தேதி ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் என  71 ஆயிரம் புதிய ஊழியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 


அந்த வகையில் தற்போது அரசு பணிகளுக்கு மேலும் 71 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணைகளை நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும் வேலை வாய்ப்பு திருவிழாவில் பிரதமர் மோடி வழங்கினார். இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அஞ்சல்துறை ஆய்வாளர், டிக்கெட் கிளார்க், இளநிலை உதவியாளர், தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர், தண்டவாள பராமரிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் சேருவார்கள். அவர்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் எவ்வாறு அரசுப் பணிகளில் நடக்க வேண்டும் என உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.