தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர விரைவில் புதிய மருத்துவமனையைக் கட்ட புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். ரத்த தானம் கொடுப்பவர்களை கவுரவிக்கும் பொருட்டும் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய ரத்த தான மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி ரத்த தான மாத விழா, புதுவை இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி விழாவைத் தொடங்கி வைத்து, கடந்த அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2021 வரை சிறந்த முறையில் ரத்த தான முகாம்கள் நடத்திய அமைப்புகளுக்கும், இரண்டு முறை முதல் எட்டு முறை வரை ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கும் நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்.
அதையடுத்து மருத்துவக் கல்லூரியில் புதிதாக நிறுவப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனை முதல்வர் ரங்கசாமி செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, நீண்ட நாட்களாக எம்ஆர்ஐ ஸ்கேன் இங்கு இல்லாமல் இருந்தது. ரூ.6 கோடியில் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி இல்லையென்றால், கொரோன தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு இருக்கும். நிறைய பேர் தடுப்பூசி போட மறுக்கின்றனர். ஆனால் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போது தான் கொரோன தொற்று மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
நூறு சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக புதுச்சேரி மாற வேண்டும். கொரோன தொற்று வரும் போது அரசு மருத்துவக் கல்லூரியில் மற்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. இதனால் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகப் புதுவை அரசு விரைவில் புதிதாக ஒரு மருத்துவமனையை கட்ட முடிவு எடுத்துள்ளது. இதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் சித்ரா தேவி உட்படப் பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்