கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய இஸ்லாமியர்கள் கடந்த ஆண்டு  ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.


இருப்பினும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 79,000 பேருக்கு மட்டுமே சவுதி அனுமதி வழங்கியது. யாத்ரீகர்களுக்கு கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களையும் சவுதி அதிகாரிகள் வழங்கி இருந்தனர்.


இதையடுத்து, ஹஜ் மேலாண்மை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஹஜ் கமிட்டிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் பலமுறை ஆலோசனை நடத்தியது. 


அதன் விளைவாக புதிய ஹஜ் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு சமர்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பத்திற்கான விண்ணப்பட்ட கட்டணம் வசூல் செய்யப்படாது என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். 


ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுகிறார்களோ? இல்லையோ? அங்கு செல்ல திட்டமிடுபவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர்களுக்கு செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.


இந்த விண்ணப்ப படிவத்தின் விலை 300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. புதிய கொள்கையின்படி, பயணத்திற்கான தொகுப்பு கட்டணம் நபர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஹஜ் யாத்ரீகர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் பொதுவாக ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும். 


இதுகுறித்து இந்திய ஹஜ் கமிட்டி தலைமை செயல் கண்அதிகாரி, "50,000 ரூபாய் குறைப்பு முதன்மையாக வெளிநாட்டு நாணயத்திற்கான விதிமுறைகளை தளர்த்தும் வடிவத்தில் வருகிறது . முன்னதாக ஒரு ஹஜ் யாத்ரீகர் 2,100 சவூதி ரியாலுக்கு சமமான தொகையான 44,000 ரூபாய்க்கு சமமான தொகையை சமர்பிக்க வேண்டும்.


இது அந்நிய செலாவணிக்காக ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. புதிய கொள்கையில் இந்த முறை நீக்கப்பட்டுள்ளது. மேலும் யாத்ரீகர்கள் தேவை என நினைக்கும் எந்த அளவு அன்னிய செலாவணியை அவர்களே பெற்று கொள்ள வேண்டும்" என்றார்.


அதேபோல 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும்பட்சத்தில், அவர்களுடன் செல்ல ஆண் குடும்ப உறுப்பினர் இல்லாமல் இருந்தால். 4 அல்லது அதற்கு அதிகமான பெண்கள் அடங்கிய குழுவுடன் செல்லலாம். அந்த குழுவை, ஹஜ் கமிட்டி அமைக்கும்.


அதேபோல, ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இடமாக சென்னை உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை கொச்சி, கண்ணூர், விஜயவாடா ஆகிய இடங்களில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.


ஹஜ் கமிட்டி மூலம் பயணம் மேற்கொண்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.