கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, காய்ச்சல் மற்றும் மார்புத் தொற்று அறிகுறிகளால், நேற்று (திங்கள்கிழமை) மாலை திருவனந்தபுரம் அருகே நெய்யாட்டின்கராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி


79 வயதான மூத்த அரசியல்வாதி நெய்யாட்டின்கராவில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கேரளா அரசியல் சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உம்மன் சாண்டியின் சகோதரர் அலெக்ஸ் வி சாண்டி, அவரது குழந்தைகள் மற்றும் மனைவி அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.


சிகிச்சை அளிக்கவில்லை என புகார்


மேலும் தன் சகோதரர் உம்மன் சாண்டிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக அவர் நேற்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. உம்மன் சாண்டியின் குடும்பத்தினர் தனக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக அலெக்ஸ் தனது புகாரில் தெரிவித்துள்ள நிலையில் புகாரை பதிவு செய்த பிறகு, அதை திரும்பப் பெறுமாறு பலர் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 



உம்மன் சாண்டியின் மகன்


இந்த புகாரை உம்மன் சாண்டியின் குடும்பத்தினர் முற்றிலும் மறுத்துள்ளனர். அவரது மகன் சாண்டி உம்மன், தனது தந்தையின் சகோதரர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்றும், சிகிச்சை மறுக்கப்பட்ட புகாருக்கு அவரது தந்தை (உம்மன் சாண்டி) தானே பதில் அளித்துள்ளார் என்றார். இது தொடர்பாக மேலும் கூறுவதற்கு எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Prakash Raj Slams Centre : "காரி துப்பினாலும் கூட புத்திவரவில்லையே.. ஆஸ்கர் இல்லை என குமுறுகிறார்கள்" பிரகாஷ்ராஜ் காட்டமான விமர்சனம்..


சாண்டியின் சமூக வலைதள பதிவு


முன்னதாக, உம்மன் சாண்டிக்கு அவரது குடும்பத்தினர் சிகிச்சை அளிக்க மறுத்ததாக எழுந்த வதந்திகளை பற்றி சமூக வலைதளங்களில் அவரே பேசியிருந்தார். அவரது மகன் சாண்டி உம்மன், "ஆதாரமற்ற வதந்திகள்" பரப்புவதாக ஊடகங்களைக் குற்றம் சாட்டினார். மேலும் சமூக ஊடகங்களில் தனது தந்தையின் சாட்சியத்தை வெளியிட்டார். அவர் தனது முகநூல் கணக்கில் தனது தந்தையின் நோய் மற்றும் சிகிச்சை குறித்து பேசியதுடன், தந்தையின் சகோதரர் கூறிய குற்றச்சாட்டு குடும்பத்தில் ஏற்படுத்திய வலியையும் விவரித்தார். முன்னதாக திங்கள்கிழமை, UDF ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ஹசன், உம்மன் சாண்டி சிகிச்சைக்காக பெங்களூருக்கு மாற்றப்படுவார் என்று கூறினார்.



உம்மன் சாண்டியின் முகநூல் பதிவு


"எனது உடல்நிலை குறித்து சில தரப்பில் இருந்து தவறான மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுவதற்கு மிகவும் வருந்துகிறேன். நவீன மருத்துவத்தின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்தி எனது குடும்பம், கட்சி சிகிச்சை அளித்து வருகிறது. எனது நோய் மற்றும் சிகிச்சை குறித்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் தெளிவான புரிதல் உள்ளது. எனவே, யாருக்கும் எதிராக செய்யக் கூடாத புண்படுத்தும் பிரசாரத்தை நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடக்கும் மோசமான விளம்பரம் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. உடல் இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. மருந்து சாப்பிட்டு வந்த களைப்பு உடம்பை ஆட்டிப்படைக்கிறது. இதற்கு மாறான கருத்துகள் ஆதாரமற்றது. உலகின் சிறந்த மருந்தின் பரிந்துரைப்படி எனது சிகிச்சை தொடர்கிறது. எனவே தெரிந்தோ தெரியாமலோ இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறைந்த பட்சம் இவ்வாறான பிரசாரங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்", என்று மலையாளத்தில் பதிவு செய்திருந்தார்.