சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.  நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் பி.ஆர். கவாய் அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமலா இருக்கும் என கேள்வி எழுப்பினர்.


நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் பி.ஆர். கவாய் நாங்கள் மாணவர்களாக இருக்கும் போது அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறோம் ஆனால் அரசியல் பார்வை வெளிப்படுத்தியது இல்லை என குறிப்பிட்டனர். அதே போல் விக்டோரியா கவுரியும் இருக்கலாம் அல்லவா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் பல நீதிபதிகள் கட்சியில் இருந்தாலும் அரசியல் பார்வையை வெளிப்படுத்தியதில்லை, ஆனால் விக்டோரியா கவுரி குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக வெறுப்பு பேச்சு மற்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளார் என கூறினார்.


மேலும் வழக்கறிஞர் ஆனந்த க்ரோவர் பேசுகையில், ”இப்படி பேசிவிட்டு அதே அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு பதவி ஏற்பது ஏற்புடையது அல்ல. அவர் அடிப்படை தகுதியை இழந்து விட்டார்” என குறிப்பிட்டார்.


பிசிஐ கரிமன் மனன் குமார் மிஸ்ரா,” பார் கவுன்சில்களுடன் நாங்கள் சரிபார்த்தோம். விக்டோரியா கவுரி மீது முறைகேடு புகார்கள் எதுவும் இல்லை” என குறிப்பிட்டார்.


அதற்கு பதிலளித்த நீதிபதிகள், நன்கு அலசி ஆராய்ந்துதான் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தை எப்படி ஒப்பிடலாம் என கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணையின் போது விக்டோரியா கவுரி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞராக பதவி ஏற்றார்.


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


வழக்கின் பின்னணி:


இந்தியாவின் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் கிரண் ரிஜ்ஜூ. இந்த நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதாவது, நாட்டின் மூத்த வழக்கறிஞர்கள்  கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 13 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் நாட்டின் முக்கியமான உயர்நீதிமன்றங்களான அலகாபாத் நீதிமன்றம், கர்நாடகா நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்


சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக லட்சுமணா சந்திரா விக்டோரியா கவுரி, வழக்கறிஞர் பிள்ளைபாக்கம் பாகுகுடும்பி பாலாஜி, வழக்கறிஞர் கந்தசாமி குழந்தைவேலு ராமச்சந்திரன், ஜூடிசியல் ஆபீசர் கலைமதி ராமச்சந்திரன், ஜூடிசியல் ஆபீசர் திலகவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் விக்டோரியா கவுரி மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச்சில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார். 2020 செப்டம்பரில் அவர் பதவியேற்பதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, பா.ஜ.க.,வின் அனைத்து பதவிகளிலிருந்தும், கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்புகள் இருந்து வந்த நிலையில், அவர் நேற்று அதிகாரப்பூர்வமாக கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


அவரது நியமனம் தற்போது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலிஜியம் அமைப்பு இவரது பெயரை பரிந்துரை செய்தது முதலே சர்ச்சை வெடித்து வந்தது. விக்டோரியா கவுரி பா.ஜ.க. தேசிய மகளிரணி செயலாளராக பொறுப்பு வகித்தவர் என்றும், அவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விக்டோரியா கவுரி பா.ஜ.கவில் இருந்த போது இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதன் பேரில், “வெறுக்கத்தக்க பேச்சு” தொடர்பாக ஐ.பி.சி.,யின் 153A, 153B, 295A மற்றும் 505 பிரிவுகளின் கீழ் விக்டோரியா கௌரி மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர்கள் கோரினர்.