இமாச்சலப்பிரதேசத்தைவிட அதிக குளிர் நிலவும் என்பதால் டெல்லிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக பனிப்பொழிவு காரணமாக டெல்லி உட்பட வட இந்தியாவின் சில பகுதிகளுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 


நாளுக்குநாள் அதிகரிக்கும் குளிர்:


இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இந்த மோசமான சூழல் காரணமாக டெல்லியில் கடுமையான குளிர் அலைகள் தாக்கத்தை விளைவித்து வருகின்றன. 






இன்று தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து, இந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்திற்கு சுமார் 20 விமானங்கள் தாமதமாக வந்தடைந்ததாக ANI தகவல் தெரிவித்துள்ளது. 


விமானங்களை தொடர்ந்து, மூடுபனி காரணமாக ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் பனிமூட்டம் காரணமாக 42 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. ரயில் தாமதம் காரணமாக டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நீண்ட நேரமாக  பயணிகள் காத்திருக்கின்றனர்.






ஆரஞ்சு அலர்ட்:


டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றைய நாள் முழுவதும் அடத்தியான மூடுபமி மற்றும் குளிர் காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


அதேபோல் இன்று ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் சில பகுதிகளில் குளிர் காற்று முதல் கடுமையான குளிர் காற்று நிலைகள் தொடர வாய்ப்புள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை வாட்டி வதைத்துள்ள கடுமையான குளிரால் வட இந்தியா முழுவதும் குளிரில் நடுங்கி வருகிறது. சனிக்கிழமையான நேற்று டெல்லியில் பாதரசம் 1.5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. இது ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சில மலைப்பகுதிகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


டெல்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மத்திய டெல்லியில் உள்ள ரிட்ஜ் வானிலை நிலையத்தில் கடுமையான குளிர் அலையினால் குறைந்தபட்ச வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. 


ராஜஸ்தானில் வனஸ்தலி (1.7 டிகிரி செல்சியஸ்), சிகார் (1 டிகிரி செல்சியஸ்), பிலானி (0.6 டிகிரி செல்சியஸ்) மற்றும் சுரு (0 டிகிரி செல்சியஸ்) உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே குறைந்த குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.