இந்த தலைமுறையினர் மிகப்பெரிய பிரச்சனையாக பார்ப்பது முடி உதிர்வை தான். உணவு, பழக்க வழக்கம், குடும்ப வாரிசு போன்ற காரணங்கள் பலருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனை தொடங்கி இறுதியாக வழுக்கையில் போய் நிற்கிறது. எல்லாவற்றைய பாதுகாக்கும் திறன் கொண்டவரால் கூட தன்னுடைய தலையில் இருக்கும் முடியை பாதுகாக்க முடியவில்லை. இதனாலேயே பலருக்கு தன்னம்பிக்கை இழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கென லட்சக்கணக்கில் செலவு செய்து பயனில்லை என பலர் புலம்பி நாம் கேட்டிருப்போம்.
இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள், ஒற்றை பெண்கள், முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதுபோல தங்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தெலுங்கானாவில் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சித்திப்பேட்டை மாவட்டம், கோஹேடா மண்டலம் தங்கல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள ரேணுகா எல்லம்மா கோவிலில் வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் சங்கம் ஒன்று புதிதாக கூட்டப்பட்டது. இந்த சங்கத்திற்கு புதிய செயற்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் முதல் தலைவராக வேல்டி பாலையா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக ராஜேஷமும், பொருளாளராக மவுதம் ராமுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனிடையே, வழுக்கை பாதிக்கப்பட்டோர் சங்கத் தலைவர் வேல்டி பாலய்யா, ”வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சமூகத்தில் நிறைய அவமானங்களைச் சந்தித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சங்கராந்தி பண்டிகைக்கு முன்னதாக ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட சங்கம் அமைத்து பெரிய அளவில் இயக்கம் நடத்தப்படும். மேலும், பிரகதி பவனை முற்றுகையிடுவோம்” என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இப்போதெல்லாம் இந்த வழுக்கை பிரச்சனை எல்லோருக்கும் வந்து கொண்டிருக்கிறது. 35 வயதிற்கு மேற்பட்ட பலர் உணவு அல்லது வாழ்க்கை முறை மாற்றத்தால் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் கூட வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். முடி உதிர்தல் பிரச்சனையாக ஆரம்பித்து படிப்படியாக வழுக்கையாக மாறி அவர்களின் நம்பிக்கை குலைகிறது. முடி இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அழகில்லாமல் தோற்றமளிக்கும் போது தாழ்வு மனப்பான்மை தொடங்குகிறது. இந்தப் பிரச்சனை மெல்ல மெல்ல தன்னம்பிக்கையை சிதைக்கிறது. சொல்லப்போனால், இதுவும் ஒரு உளவியல் பிரச்சனையாக மாறுகிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான் நாங்கள் அனைவரும் வழுக்கை பாதிக்கப்பட்டவர்களின் சங்கத்தை உருவாக்கினோம். இந்த ஓய்வூதியத் தீர்மானம் சாதாரணமாக எடுக்கப்பட்டதல்ல, மிகுந்த யோசனைக்குப் பிறகு இந்தக் கோரிக்கை விடப்பட்டது” என்றும் தெரிவித்தார்.