2022 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் 57 நக்சல்கள், 283 தேடப்பட்ட கிரிமினல்கள் கைது செய்யப்பட்டதாக பீகார் ஏடிஜிபி தெரிவித்துள்ளார். 


தலைநகர் பாட்னாவில் ஏடிஜிபி ஜே.எஸ்.கங்வார் பேசுகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு பிஹாரில் 6 அதிமுக்கியமான நக்சல்கள் உள்பட 57 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தவிர கொடுமையான குற்றங்களைச் செய்த 283 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த ஆண்டு அதிரடிப் படையினர் மேற்கொண்ட ஆய்வில் 14 சாதாரண ஆயுதங்கள், 3 ஏக 47 ரக துப்பாக்கிகள், 1 ஏகே 56 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர உத்தரப் பிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஹரியாணா, மகாராஷ்டிரா, மேற்குவங்க மாநிலங்களில் 33 நக்சல்களை பீகார் போலீஸார் கைது செய்துள்ளனர். 118 நாட்டு துப்பாக்கிகளும், 7870 லைவ் கார்ட்ரிட்ஜுகளும், ஒரு கையெறி குண்டும், 15 கிராம் வெடிமருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.


2014க்குப் பின் குறைந்ததா நக்சல் ஆதிக்கம்:


கடந்த 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தது. அதன் பின்னர் நாட்டில் நக்சல் ஆதிக்கம் குறைந்திருப்பதாக அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் தேசிய பழங்குடிகள் ஆராய்ச்சி மையத்தை தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர் அமித்ஷா, "வடகிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் வாயிலாக அங்கு வளர்ச்சி சாத்தியமானது.கடந்த 2006 - 14 வரையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது வட கிழக்கு மாநிலங்களில் 8,700 அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் அவை 1,700 ஆக குறைந்துள்ளன. களத்தில் வீரர்கள் உயிரிழப்பு 304ல் இருந்து 87 ஆகவும், பொதுமக்கள் பலியாவது 1,990ல் இருந்து 217 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி ஆட்சியில் நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் பேசினார்.


பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.


மத்திய அரசின் நிலைப்பாடு:
கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாதிகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதிகள் வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்த்து போரிடும் அதிகாரிகளுக்கு தீரச்செயல் விருதுகளை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களின் பரிந்துரைப்படி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட மத்திய ஆயுதப் போலீஸ் படை பணியாளர்களுக்கு மத்திய அரசு கூடுதல் படிகள் மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்குகிறது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டுக்காக, முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவது தவிர, கட்டமைப்பு,  கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.