புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க புதிதாக கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளுடன், மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை மேற்கொண்டார். காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்தமோகன், டிஐஜி மிலிந்த் தும்ப்ரே, சீனியர் எஸ்.பி.க்கள் பிரதிக்ஷா கொடாரா, ராகுல் அல்வால், லோகேஸ்வரன் மற்றும் எஸ்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு ஏதுவாகவும், வருகின்ற நவம்பர் 8 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதைக் கருத்தில் கொண்டும் போக்குவரத்தைச் சரிசெய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அதைத் தடுக்கும் வகையில் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது சம்பந்தமாகவும், பல்வேறு முடிவுகள் எடுப்பது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக அரசின் எண்ணங்களைக் காவல்துறைக்குத் தெரிவித்துள்ளோம். குற்றம் நடைபெறுவதற்கு முன்பாகவே தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தீர்க்கமான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் நடைபெற்ற கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநில மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க காவல் துறை தயாராக இருக்கிறது.
32 பேர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒப்புதல் வந்தபிறகு அவர்கள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். புதிய சட்டங்களைக் கொண்டுவரும் போது அதனைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, மத்திய உள்துறையின் ஒப்புதலைப் பெற்று இயற்ற வேண்டும். ஆகவே, இது தொடர்பான முயற்சிகளை உடனே தொடங்க உத்தரவிட்டுள்ளேன். இது போல் பல்வேறு விதமான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். சிறையில் உள்ள கைதிகளுக்கு உதவும் அதிகாரிகள் மீது உடனடி விசாரணை நடத்தி அவர்களைப் பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்