பசியால் வாடும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மலிவு விலைகளில் அரிசி, பருப்பு, சீனி, மண்ணெண்ணெய்,பாமாயில் போன்ற அத்தியாவசிய உணவுப்பொருள்களை வாங்கி பயன்பெற்றுவரும் நிலையில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இப்படி என்ன தான் அத்தியாசிய பொருள்களை மலிவு விலையில் வாங்கினாலும், இதனைச் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களின் விலை தான் உச்சத்தைத்தொட்டுவருகிறது.





ஆரம்பத்தில் 250 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர்களின் விலை கொஞ்சம் கொஞ்சமாக கூடி தற்போது 950க்கு விற்பனையாகிறது. மத்திய அரசின் அனைவருக்கும் இலவச சிலிண்டர் அடுப்புகளை வழங்கும் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளில் சிலிண்டர் அடுப்புகள் உள்ளது. முதலில் மானியத்தில் சிலிண்டர் வாங்கிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்த நிலையில் படிப்படியாக மானியத்தையும் முழுமையாக ரத்து செய்துவிட்டது. இருந்தப்போதும் அவசர தேவைகளுக்கு சிலிண்டர்களை வாங்கிய மக்கள் எந்த விலைக்கொடுத்தாலும் வாங்க வேண்டும் என மனநிலையில் உள்ளனர். இதனைப்பயன்படுத்தி தான் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்துவருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலையில் தான், மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.


நேற்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி, நிதித்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாநில அரசின் பிரதிநிதிகள் என பலர்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ரேசன் கடைகளில் நிதி மேலாண்மையைப் பயன்படுத்த அரசு நடவடிக்கைகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.





இதோடு மட்டுமின்றி அடுத்த கட்டமாக இந்தியா முழுவதும் அனைத்து ரேசன் கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சில்லறை விற்பனை செய்வது குறித்து பரசீலனை செய்யப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும் போது இனி அதிகவிலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்ய நேரிடாது எனவும், மக்கள் நிச்சயம் இதில் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் தான் இதனை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும், முதலில் மூலதனப்பெருக்கத்திற்காக ரேசன் கடை டீலர்களுக்கு முத்ரா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன இருந்தாலும் இத்திட்டம் எந்தளவிற்கு மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.