மத்திய பிரதேசம் போபாலில் உள்ள பில்கிரியா காவல் நிலையத்திற்குட்பட்ட சவானி பத்தர் கிராமத்தில் வீட்டில் கோழி சமைப்பது தொடர்பாக தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தீர்க்க சென்ற பக்கத்து வீட்டுகாரர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அன்று நடந்துள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட பப்பு அஹிர்வார் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்ட பின்னர்தான் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து போபால் தேஹாத் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) கிரண் லதா கர்கேடா கூறுகையில், "செவ்வாயன்று வீட்டில் கோழி சமைப்பதற்காக தம்பதியினர் சண்டையிட்டனர்.
அப்போது, வீட்டில் கோழி சமைக்க அந்த பெண் மறுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, அந்த பெண்ணை அவரது கணவர் பப்பு அஹிர்வார் தாக்கியுள்ளார். அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிலர் அங்கு சென்று தம்பதி இடையே ஏற்பட்ட தகராறை தீர்த்து வைத்துள்ளனர்.
பின்னர், பப்பு தனது அண்டை வீட்டாரில் ஒருவரான பப்லு அஹிர்வாரின் வீட்டிற்கு சென்று அவரை கட்டையால் தாக்கினார். இதனால், பலத்த காயம் அடைந்த அவர், ஹமீடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட பப்பு அஹிர்வார் கைது செய்யப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை உறுதி செய்கிறது. குறிப்பாக, இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் நாட்டிலேயே முதல் இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது.
டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.