பிரதமர் மோடியின் "ஹர் கர் திரங்கா" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கர்நாடக அரசின் வெளியிட்ட விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.


 






இந்த விளம்பரத்தில் நவீன இந்தியாவின் சிற்பியான ஜவஹர்லால் நேருவின் பெயர் தவிர்க்கப்பட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாவர்க்கர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் அளித்த சாவர்க்கரை புரட்சியாளர் சாவர்க்கர் என விளம்பரம் குறிப்பிடுவதுதான்.


இந்த முழுப்பக்க விளம்பரம் இன்று காலை வெளியிடப்பட்டது. பிரிவினையின் போது நடந்த கொடுமைகளை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி அனுசரிக்கப்படும் என மோடி அறிவித்திருந்த நிலையில், இந்த விளம்பரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 


பிரிவினைக்கு நேரு மற்றும் பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவே காரணம் என பாஜக ட்வீட் செய்த வீடியோ தொடர்பாக சமூக ஊடகங்களில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.


"தற்போதைய அரசியல் சண்டைகளுக்கு தீனி போடவே ஆகஸ்ட் 14 ஆம் தேதியை பிரிவினைவாத பயங்கரங்களின் நினைவு தினமாக அனுசரிக்க வேண்டும் என பிரதமர் கூறுகிறார். இதுவே அவரின் உண்மையான நோக்கம்" என்று காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் நேருவின் புகைப்படத்தை சேர்க்க மாட்டோம் என ஆளும் பாஜக கூறியுள்ளது.


இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் ரவி குமார் கூறுகையில், "நேருவால் இந்தியா, பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்துள்ளது. அதனால்தான் அவரது புகைப்படம் நாளிதழில் தவிர்க்கப்பட்டது. வல்லபாய் படேல் நமது சுதந்திரத்திற்காக போராடினார். அதனால் அவரது புகைப்படம் சேர்க்கப்பட்டது. அதேபோல ஜான்சி ராணி, காந்தி, சாவர்க்கர் ஆகியோரின் புகைபடம் இடம்பெற்றுள்ளது.


இது மாநில பாஜக அரசின் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர்கள், முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். இதுபற்றி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறுகையில், "இது இந்திய ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு அவமானம். இந்தியா சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. பசவராஜ் பொம்மையை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண