நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, நாளுக்கு நாள் நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. நீட் தேர்வு வினாத்தாள் லீக், ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒரே தேர்வறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


கருணை மதிப்பெண் பெற்ற தேர்வர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு


இந்த நிலையில், தேர்வறையில் மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட நேரக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 13ஆம் தேதி தெரிவித்தது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வு நடைபெற உள்ளது.


எனினும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன்படி ஜூலை 6ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 


இந்த நிலையில் நீட் முறைகேடு விவகாரத்தில் ஏமாற்றியவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடமாட்டோம் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார். நீட் விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘’எவ்வளவு பெரிய உயர் அதிகாரியாக இருந்தாலும் அவர் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவரை சும்மா விடமாட்டோம். தேசியத் தேர்வுகள் முகமைக்குள் போதிய வளர்ச்சி தேவை. தவறு செய்தவர்களுக்குக் கட்டாயம் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று உறுதி கூறுகிறேன்.


உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 2 இடங்களில் தேர்வெழுதிய 1,563 மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு இந்த விவகாரத்தை மிகவும் சீரிய முறையில் விசாரித்து வருகிறது என்பதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.


உயர் அதிகாரிகள் தவறு இழைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை


தேசியத் தேர்வுகள் முகமைக்குள்ளேயே உயர் அதிகாரிகள் யாராவது தவறு இழைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.


நீட் தேர்வில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ’’அரசு தீர்வு மற்றும் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து முயற்சிகளும் உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன’’ என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.  


13 பேர் கைது


ஏற்கெனவே பிஹாரின் பாட்னா பகுதியில் உள்ள சில மையங்களில் வினாத்தாள் கசிவுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி, பொருளாதாரக் குற்றப் பிரிவு 13 பேரைக் கைது செய்தது. இதில் 4 தேர்வர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகமும் தேசியத் தேர்வுகள் முகமையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.