NEET UG Revised Result 2024: திருத்தப்பட்ட நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. exams.nta.ac.in/NEET என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் திருத்தப்பட்ட முடிவுகளை பார்க்கலாம்.
முன்னதாக வெளியான நீட் முடிவுகளின் அடிப்படையில், அகில இந்திய அளவில் முதல் இடத்தை 67 மாணவர்கள் பிடித்தனர். முதல் இடத்தை பிடித்த ஆறு மாணவர்களுக்கு, தேர்வு கண்காணிப்பாளரின் பிழை காரணமாக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. நேரத்தை இழந்ததற்காக அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
அது மட்டும் இன்றி, முதல் இடத்தை பிடித்த 44 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தவறான கேள்விக்கு பதில் அளித்த காரணத்தால் அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நீட் தேர்வில் கேட்கப்படட இயற்பியல் கேள்விக்கு நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டன.
அதில், இரண்டு ஆப்ஷன்கள் சரியானது என சர்ச்சையானதையடுத்து, இரண்டு ஆப்ஷன்களுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திற்கு தெரிய வந்ததை தொடர்ந்து, சரியான பதிலை தேர்வு செய்ய ஐஐடி குழுவை அமைத்தது. ஒரு பதில் மட்டுமே சரியானதாகக் கருதப்படும் என ஐஐடி குழு முடிவு செய்து, அதற்கு மட்டுமே பின்னர் மதிப்பெண் வழங்கப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
- exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில், Scorecard லிங்கை அழுத்தவும்.
- அதில், 'Click here for NEET 2024 Revised Score Card' என்பதை அழுத்தவும்.
- உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி, மாணவர் மின்னஞ்சல் அல்லது மாணவர் மொபைல்/மாற்று மொபைல் எண் போன்ற தேவையான விவரங்களை அளித்து, 'Submit' என்பதை கிளிக் செய்யவும்.
- நீட் தேர்வு முடிவுகள் திரையில் தெரியும்.
இந்த ஆண்டு, 24,06,079 மாணவர்கள் NEET UG தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில் 23,33,297 மாணவர்கள் மே 5, 2024 அன்று நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்றனர். NEET UG முடிவுகள் 2024 ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 23, 2024 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் ஜூன் 30, 2024 அன்று அறிவிக்கப்பட்டன.