இந்தியாவில் புற்று நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோயாளிகளுக்கு குறைவான விலையில் மருந்து மற்றும் அணுகக்கூடிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் புற்று நோய்: மக்களவையில் கேள்விநேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய நட்டா, "நோயாளிகளுக்கு குறைவான மற்றும் அணுகக்கூடிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.


புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களிடையே வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருகின்றன. பெண்களிடையே மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது.


ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 131 அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகள் உள்ளன. அவை அட்டவணை 1இல் உள்ளன. (அவை) கண்காணிக்கப்பட்டு (அவற்றின்) விலை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இவை பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகள்.


நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அளித்த பதில்: இந்த விலைக் கட்டுப்பாட்டின் மூலம் நோயாளிகள் சுமார் ₹294 கோடியை மிச்சப்படுத்தியுள்ளனர். இன்னும் 28 மருந்துகள் உள்ளன. அவை, இந்தப் பட்டியலில் இல்லை. ஆனால், NPPA (தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்) மற்றும் அரசாங்கம் அவற்றின் விலையையும் கட்டுப்படுத்தியுள்ளன. புற்றுநோய்க்கான மருந்துகளை குறைவான விலையில் தயாரிக்க முயற்சித்துள்ளோம்" என்றார்.


சுகாதார கட்டமைப்பு குறித்து எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நட்டா, "அதிக மருத்துவர்களை வைத்து கொள்ள மருத்துவக் கல்லூரிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் சமநிலை இருக்க வேண்டும்.


நாங்கள் எங்களால் முடிந்தவரை விரைவாகச் செல்ல முயற்சிக்கிறோம். அதே நேரத்தில், (நாங்கள்)  மருத்துவர்களின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பவில்லை. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2014 இல் 387 இல் இருந்து தற்போது 731 ஆக உயர்ந்துள்ளது.


அதே நேரத்தில் MBBS இடங்களின் எண்ணிக்கை 51,348 இடங்களிலிருந்து 1,12,112 (1.12 லட்சம்) ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ முதுகலை இடங்களின் எண்ணிக்கை 2014 இல் 31,185 ஆக இருந்தது, தற்போது 72,627 ஆக உயர்ந்துள்ளது" என்றார்.