நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக திகழ்வது உத்தரபிரதேசம் ஆகும். அங்கு மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. மத்தியில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிப்பதில் உத்தரபிரதேசம் மாநிலம் முதன்மையான மாநிலமாக உள்ளது.


மக்களவைத் தேர்தல் தோல்வி:


இந்த சூழலில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆலோசனை கூட்டம் மண்டல வாரியாக நடைபெற்றது.


ஜூலை 24ம் தேதி மொரதாபாத் மற்றும் பேரேலி மண்டலங்களுக்கும், 25ம் தேதி மீரட் மற்றும் பிரக்யாராஜ் மண்டலங்களுக்கும், இன்று லக்னோ மண்டலத்திற்கும் உட்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 24ம் தேதி நடந்த கூட்டத்தில் மொராபதாபாத் மற்றும் பேரேய்லி மண்டலத்திற்கு உட்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.


யோகி ஆதித்யநாத் கூட்டத்தை புறக்கணித்த துணை முதலமைச்சர்கள்:


இந்த நிலையில், நேற்று மீரட் மற்றும் பிரக்யராஜ் மண்டலத்திற்கு உட்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நடத்திய அந்த கூட்டத்தில், அந்த மண்டலத்திற்கு உட்பட் எம்.எல்.ஏ.வும், மாநில துணை முதலமைச்சருமான கேசவ் பிரசாத் மெளரியா பங்கேற்கவில்லை. இது நேற்று அந்த மாநிலத்தில் பரபரப்பபை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், இன்று லக்னோ மண்டலத்திற்குட்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த மண்டலத்திற்கு கீழ் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிக்கும் ப்ரஜேஷ் பதாக் உத்தரபிரதேசத்தின் மற்றொரு துணை முதலமைச்சர் ஆவார்.  யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதலமைச்சரான ப்ரஜேஷ் பதாக் பங்கேற்கவில்லை.


பா.ஜ.க.வில் பரபரப்பு:


நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், அந்த மாநில துணை முதலமைச்சர்களே பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யோகி ஆதித்யநாத்தை மாநில முதலமைச்சர் ஆக்கியதே உத்தரபிரதேச பா.ஜ.க.வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், தொடர் தேர்தல் வெற்றியால் அது பெரியளவில் கட்சியை பாதிக்காமல் இருந்தது.


இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தோல்வி அந்த மாநில பா.ஜ.க.வில் பிளவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. துணை முதலமைச்சர்களாக பொறுப்பு வகிக்கும் அந்த மாநிலத்தின் பா.ஜ.க.வின் சக்திவாய்ந்த இருவர் மாநில முதலமைச்சருக்கு எதிராக திரும்பியிருப்பது பா.ஜ.க. மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் சூழலில், யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக உட்கட்சி எதிர்ப்பு அதிகரித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று எதிர்பார்த்த பா.ஜ.க.விற்கு, உத்தரபிரதேசம் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 62 தொகுதிகளை வென்ற பா.ஜ.க., இந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.


இதனால், மத்தியில் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தயவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பா.ஜ.க. தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.