இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்தது தேசிய அளவில் பரபரப்பை கிளப்பிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


தொடர் பரபரப்பை கிளப்பும் நீட் விவகாரம்: நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பீகாரில் இருவரை கைது செய்துள்ளனர். மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் என அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பணம் அளித்த மாணவர்களை மணீஷ் குமார் என்பவர்தான் காரில் ஏற்றி கொண்டு யாரும் இல்லாத பள்ளிக்கு அழைத்து சென்றதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.


தேர்வு தேதிக்கு முன்னதாகவே அவர்களுக்கு வினாத்தாள் அளிக்கப்பட்டு அதில் உள்ள வினாக்களை மனப்பாடம் செய்ய வைத்ததாகவும் கூறப்படுகிறது. பணம் அளித்த மாணவர்களை அசுதோஷ் தனது வீட்டிலேயே தங்க வைத்ததாகவும் சிபிஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.


குற்றம்சாட்டப்பட்ட மணீஷ் குமார் மற்றும் அசுதோஷை விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் இன்று அழைத்துள்ளனர். விசாரணையை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ சார்பில் இதுவரை 6 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதற்கு மத்தியில், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைமை அலுவலகத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் நுழைந்துள்ளனர். 


அதிரடி காட்டும் சிபிஐ: கடந்த சனிக்கிழமை, மத்திய கல்வித்துறை அமைச்சகத்தால் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் FIR பதிவு செய்யப்பட்டது. சிபிஐக்கு முன்னதாக இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலரை கைது செய்திருந்தனர்.


பீகார், மகாராஷ்டிரா, டெல்லியில் அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு தேதிக்கு முன்னதாக வினாத்தாள் நகலை பணம் கொடுத்து வாங்கிய மாணவர் உள்பட பலர் கைதாகினர். கடந்த 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது.


இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே தேர்வு முடிவுகளும் வெளியாகின. 


இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.


முதலில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததை தேசியத் தேர்வுகள் முகமை முதலில் மறுத்தது. ஆனால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார்.