இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test) என அழைக்கப்படுகிறது. இந்தத் தேர்வை எழுதுவோர் மட்டுமே இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர முடியும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏஎனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
மத்திய, மாநில ஒதுக்கீடு
நாடு முழுவதும் உள்ள 645 மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள், 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், நீட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. மாநிலக் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் 100 சதவீத ஒதுக்கீட்டுக்கும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மாநிலக் கல்லூரி இடங்கள், சொந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படுக்ன்றன.
543 நகரங்களில் தேர்வு
2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது.
2023 நீட் தேர்வு எப்போது?
2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. எனினும் விண்ணப்பப் பதிவு எப்போது என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது.ஜனவரி மாதத்திலேயே தேசியத் தேர்வுகள் முகமை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவைத் தொடங்கும் என்று தகவல் வெளியான நிலையில், விண்ணப்பப் பதிவு தொடங்கவில்லை. இந்த நிலையில் விண்ணப்பப் பதிவு நாளை (மார்ச் 6) தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் இறுதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
* விண்ணப்பப் படிவம் வெளியான உடன், தகுதியான தேர்வர்கள் nta.ac.in அல்லது neet.nta.nic.in ஆகிய இணையதளங்களுக்குச் செல்ல வேண்டும்.
* Candidate Activity என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதில் NEET UG 2023 registration link என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அங்கு திறக்கப்படும் பக்கத்தில் தேர்வர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும்.
* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.