பெண்களுக்கு என்ன உரிமையெல்லாம் இருக்கிறது? இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்வது என்ன? தெரிஞ்சுக்கோங்க!
International Womens Day 2023: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள சில முக்கிய பெண் உரிமைகள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.

International Womens Day 2023: சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் நிலையை வலுப்படுத்தவும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவும், இந்திய அரசியலமைப்பில் பெண்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள சில முக்கிய பெண் உரிமைகள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.
சம ஊதியத்திற்கான உரிமை
கூலித்தொழிலாளர்கள் முதல் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் வரை, ஒரே வேலைக்கு கூட ஆண், பெண் சம்பளத்தில் வித்தியாசம் இருப்பதைக் காணமுடிகிறது. ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு சமமான ஊதியம் பெறும் உரிமையை வழங்குகிறது. சம ஊதியச் சட்டத்தின் கீழ், பாலின அடிப்படையில் சம்பளம் அல்லது ஊதியத்தில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
மகப்பேறு நன்மைக்கான உரிமை
பணிபுரியும் பெண்கள் மகப்பேறு தொடர்பான சலுகைகள் மற்றும் வசதிகளைப் பெறுவதற்கான உரிமை உண்டு. மகப்பேறு சலுகைச் சட்டத்தின் கீழ், பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு சம்பளத்தோடு கூடிய 6 மாத விடுப்பு எடுக்கலாம். பின்னர் அவர் வேலைக்குத் திரும்புவதற்கான உரிமையையும் பெறுவார்.
பெயர் மற்றும் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கும் உரிமை
குற்றங்கள் தொடர்பாகவும் பெண்களுக்கு சில உரிமைகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்க உரிமை உண்டு. பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ரகசியம் காக்கும் வகையில், பெண் போலீஸ் அதிகாரி முன்னிலையில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய பெண்ணுக்கு மட்டுமே உரிமை உள்ளது. பெண்கள் தங்கள் புகார்களை நேரடியாக மாவட்ட ஆட்சியர் முன் பதிவு செய்யலாம். மேலும், பெண்ணின் அடையாளத்தை வெளியிட காவல்துறை, ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உரிமை இல்லை.
இலவச சட்ட உதவிக்கான உரிமை
கற்பழிப்பு அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் இலவச சட்ட உதவி பெற இந்திய அரசியலமைப்பு உரிமை வழங்குகிறது. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் உள்ள SHO விடம் உதவி பெறலாம் மற்றும் SHO ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய சட்ட அதிகாரத்திற்கு தெரிவிப்பார்.
இரவில் கைது செய்வதைத் தவிர்க்கும் உரிமை
சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னரோ அல்லது அந்தி சாயும் பின்னரோ ஒரு பெண்ணை கைது செய்ய முடியாது என்று சட்டம் கூறுகிறது. பெண்ணின் குற்றம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அல்லது ஸ்பெஷல் கேஸாக இருந்தாலும் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டின் உத்தரவு இல்லாமல் மாலை முதல் சூரிய உதயம் வரை அந்த பெண்ணை போலீசார் கைது செய்ய முடியாது.