Airlines : நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் மதுபோதையில் சக பயணி மீது இந்திய மாணவர் ஒருவர் சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


விமானத்தில் பயணி மீது சிறுநீர்:


சமீப காலமாக விமானங்களில் சக பயணிகள் மீது சிறுநீர் கழிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் மீண்டும் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் மதுபோதையில் சக பயணி மீது இந்திய மாணவர் ஒருவர் சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்திய பயணி ஒருவர் சனிக்கிழமை  பயணித்துள்ளார். மது போதையில் இருந்த அவர் சக பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார். 21 வயதுடைய ஆர்யா வோஹ்ரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் சக பயணி மீது சிறுநீர் கழித்ததால் விமானத்தில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


சக பயணிகளுக்கு தொந்தரவு:


இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க ஏர்லைன்ஸ் அறிக்கையின்படி, ”அமெரிக்கா ஏர்லைன்ஸில் இந்திய மாணவர் ஆர்யா வோஹ்ரா என்றவர் மதுபோதையில் சக பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். மேலும் இருக்கையில் அமராமல் அங்கிருந்து பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  அறிவுரைகளையும் கடைபிடிக்காமல் சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். 15gc இருக்கையில் அமர்ந்திருந்த அவர் அவர் பக்கத்தில் இருந்த நபர் மீது சிறுநீர் கழித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, இரவு 9.30 மணிக்கு விமானம் தரையிறங்கப்பட்டது பின்பு, அந்த பயணி CISF அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் அவர்களிடமும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.  மேலும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஏர்லைன்ஸிடம் விரிவான அறிக்கையை இந்திய விமான போக்குவரத்து ஒழுக்குமுறை ஆணையம் கோரியுள்ளது.  


அமெரிக்க ஏர்லைன்ஸ் தடை:


இந்நிலையில்,  இந்திய மாணவர் ஆர்யா வோஹ்ரா, சக பயணி மீது சிறுநீர் கழித்துள்ளதால், அவர் விமானத்தில் பயணிக்க அமெரிக்க ஏர்லைன்ஸ் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.


முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்தது. பணியை செய்யத் தவறியதற்காக விமானத்தின் பைலட் - இன் கமாண்டின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஏர் இந்தியா விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.