நீட் முறைகேடு:
இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 18-வது பாராளுமன்ற கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து விவாதம் நடத்த எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாணவர்களின் கனவு சிதைக்கப்பட்டுள்ளது:
இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக பேசுகையில், "நீட் தேர்வு முறைகேடுகளால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாரான மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளன. நேற்று நடந்த எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நீட் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வலியுறுத்தினேன்.
மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை காட்ட ஒரு நாள் முழுவதும் நீட் பற்றி விவாதிக்க வலியுறுத்தினேன். நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எனது கருத்துக்கு எதிர்கட்சியினர் ஒருமித்த ஆதரவு அளித்தனர். நாடாளுமன்றத்தில் மிகவும் அமைதியாக ஆக்கப்பூர்வ விவாதமாக இருக்க வேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் கருத்து. நீட் முறைகேடு குறித்து ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும்" என்றார்.