முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கையை விரைவில் நடத்திடக் கோரி டெல்லியில் மருத்துவர்கள் நடத்திய போராட்த்தில் காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
பேரணியில் ஈடுப்பட்ட 1௦க்கும் மேற்பட்ட மருத்துவர்களை காவல்துறை சிறைபிடித்ததைக் கண்டித்து நேற்று மாலை டெல்லி சரோஜினி நகர் காவல் நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்தும், முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கையும் வலியுறுத்தியும் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அகில இந்திய மருத்துவர் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் மீதான அத்துமீறலை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வன்மையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், "பூ தூவியது விளம்பரத்திற்கு, உண்மையில் அநீதிதான் தூவப் படுகிறது. மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, நான் எப்போதும் கோவிட் போராளிகளுடன் துணை நிற்பேன்" என்று பதிவிட்டார்.
போராட்டம் எதற்கு:
முன்னதாக, நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்த தடை விதித்தது. இதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதைத் தெரிவித்துள்ள மருத்துவக் கலந்தாய்வுக்கான குழு, மருத்துவக் கலந்தாய்வு தேர்வர்களுக்கான தகவலாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையை அடுத்து பொங்கல் விடுமுறை வருவதால், பொங்கலுக்குப் பிறகே எம்பிபிஎஸ் அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 10.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதால், மாநில இட ஒதுக்கீட்டான கலந்தாய்வும் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவர்கள் போராட்டம்:
இந்தாண்டு, ஜனவரியில் நடத்தப்படவேண்டிய முதுகலை படிப்புக்கான நீட் தேர்வு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடிய மாணவர்கள் கொரோனா பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதேபோன்று, முதுகலை மாணவர்களின் புதிய குழு இணையும் வரை, முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் மருத்துவ சேவை (பொதுவான மற்றும் சிறப்பு தனித்தன்மை வாய்ந்த) தொடரலாம். அதேபோல புதியவர்கள் நியமிக்கப்படும் வரை மூத்த மருத்துவர்கள்/ பதிவாளர்களின் சேவைகளையும் தொடரலாம் என்றும் தெரிவித்தது.
இத்தகையை போக்கு முதுகலை மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு மனச்சோர்வையும், ஊக்கமின்மையும் ஏற்படுத்தும் என்றும், சேர்க்கையை ஒத்திவைப்பதால் நாட்டின் அடிப்படை சுகாதார கட்டமைப்பு சீர்குலையும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்