இந்தியாவில் செய்தி தொலைக்காட்சி ஊடகத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனம் என்டிடிவி. இந்த நிறுவனத்தை திறம்பட நிர்வகித்தவர்கள் அதன் நிறுவனர்களான பிரனாய் ராயும் ராகிகா ராயும்.
நிறுவனத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் நோக்கில் வட்டி இல்லா கடனை விசிபிஎல் என்ற நிறுவனத்திடம் பிரனாய் ராய், ராதிகா ராயுக்கு சொந்தமாக உள்ள நிறுவனமான ஆர்ஆர்பிஆர் நிறுவனம் வாங்கியது.
இந்த ஆர்ஆர்பிஆர் நிறுவனம்தான், என்டிடிவியின் பெரும்பாலான பங்குகளை வைத்திருந்தது. இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானியின் மறைமுக கட்டுப்பாட்டில் இருந்த விசிபிஎல் நிறுவனத்திடம் இருந்து 400 கோடி ரூபாய் கடனை இரண்டு தவணையாக ஆர்ஆர்பிஆர் நிறுவனம் பெற்றது.
கடன் ஒப்பந்தத்தின்படி, பிரனாய் ராயும் ராதிகா ராயும் தங்களின் 29.18 சதவிகித பங்குகளை ஆர்ஆர்பிஆர் நிறுவனத்திற்கு வழங்கினர்.
கடனை திருப்பி செலுத்தாவிட்டால், ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் 99.9 சதவிகித பங்குகள் விசிபிஎல் நிறுவனத்திற்கு செல்லும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கடன் வாங்குவதற்கு முன்பாக பிரனாய் ராயும் ராதிகா ராயும் என்டிடிவியின் 55 சதவிகித பங்குகளை வைத்திருந்தனர்.
கடன் வாங்கிய பிறகு, அவர்கள் நேரடியாக 32.26 சதவிகித பங்குகளை வைத்திருந்தனர். 12 ஆண்டுகள் ஆன பிறகும், வாங்கிய கடன் பிரனாய் ராயும் ராதிகா ராயும் கடனை திருப்பி செலுத்தவில்லை.
இச்சூழலில்தான், சமீபத்தில், அதானி குழுமத்தின் துணை நிறுவனமாக உள்ள ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க், அம்பானியின் விசிபிஎல் நிறுவனத்தை வாங்கியது. நிறுவனத்தை வாங்கிய உடனே கடன் ஒப்பந்தத்தின்படி என்டிடிவி பங்குகளை பெறும் உரிமையை ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் பயன்படுத்தி கொண்டது.
அதன் வழியாக, 29.18 சதவிகித பங்குகள் அதானியின் நிறுவனத்திற்கு சென்றது. மேலும், கூடுதலாக 27.26 சதவிகித பங்குகளை வாங்க அந்நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதை ஏற்றுகொண்டுள்ள பிரனாய் ராயும் ராதிகா ராயும் தங்களின் பங்குகளை விற்க சம்மதம் தெரிவித்தனர்.
இந்த பங்குகளை விற்றதன் மூலம் பிரனாய் ராயுக்கும் ராகிகா ராயுக்கும் 602 கோடி ரூபாய் கிடைக்க உள்ளது. அதாவது ஒரு பங்கிற்கு, 342.65 ரூபாய் கிடைக்க உள்ளது. ஏற்கனவே, ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு என்டிடிவியில் 29.18 சதவிகித பங்குகள் இருந்தன.
பின்னர், திறந்த சலுகை (Open offer) மூலம் 56.45 சதவீத பங்குகளை பெற்றன. அதானி எண்டர்பிரைசஸின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ள துணை நிறுவனமான விசிபிஎல், என்டிடிவியில் கூடுதலாக 8.27% ஈக்விட்டி பங்குகளை வைத்திருக்கிறது.
எனவே மொத்தமாக, என்டிடிவியில் அதானி எண்டர்பிரைசஸின் ஒட்டுமொத்த பங்குகள் 64.72 சதவிகிமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், பிரனாய் ராயும் ராதிகா ராயும் முழு நேர இயக்குநர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் நிர்வாக இணைத் தலைவர்களாக இருந்தனர்.
இவர்களை தவிர, டேரியஸ் தாராபோர்வாலா நிர்வாகமற்ற, சுதந்திரமற்ற இயக்குநர் பதவியிலிருந்தும், கௌசிக் தத்தா, இந்திராணி ராய் மற்றும் ஜான் மார்ட்டின் ஓ'லோன் ஆகியோர் நிர்வாகமற்ற, சுயாதீன இயக்குநர்கள் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளனர்.