Gujarat accident: குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை பேருந்தும்  எஸ்யூவி காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.


சூரத்தில் நடைபெற்ற பிரமுக் சுவாமி மஹராஜ் சதாப்தி மஹோத்சவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து நவ்சாரி தேசிய நெடுஞ்சாலை எண் 48இல் விபத்தில் சிக்கியது.


அந்த சமயத்தில், பேருந்தை ஓட்டி சென்ற டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மீது மோதியது. காரில் இருந்த ஒன்பது பேரில் எட்டு பேர் இறந்தனர். பேருந்தில் இருந்த 28 பேர் காயமடைந்தனர்.


11 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சூரத்தில் இருந்து வல்சாத் நோக்கி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.


இதுகுறித்து நவ்சாரி காவல் கண்காணிப்பாளர் ருஷிகேஷ் உபாத்யாய் கூறுகையில், "எதிர் திசையில் இருந்து எஸ்யூவி வந்து கொண்டிருந்த போது, ​​வெஸ்மா கிராமத்திற்கு அருகே விபத்து ஏற்பட்டது.


குஜராத்தில் உள்ள அங்கலேஷ்வரில் வசிப்பவர்கள்தான் எஸ்யூவியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வல்சாத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் வல்சாத்தை சேர்ந்தவர்கள் என்றார்.


விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "குஜராத்தின் நவ்சாரியில் நடந்த சாலை விபத்து வேதனை அளிக்கிறது. இந்த துயரச் சம்பவத்தில் குடும்பத்தை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கடவுள் அவர்களுக்கு வலியை தாங்கும் சக்தியை கொடுக்கட்டும். 


காயமடைந்தவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உடனடி சிகிச்சை அளித்து, அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


 






இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு, போலீசார் கிரேன் மூலம் பேருந்தை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.


பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 14 ஆம் தேதி ஹமதாபாத்தில் பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்சவ் தொடக்க விழாவில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.