அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் அனைத்தும் முழு வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. ஆளும் பாஜக அண்மையில், தங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகள் அனைத்தையும் இணைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தியது. இதனிடையே, பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய நிலையில், விரைவில் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இந்த ஆலோசனைக் கூட்டமானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும், வரும் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாஜக எம்பி சுகந்தா மஜும்தார் பேசுகையில், "ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த என்டிஏ எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலம் தொடர்பான இரண்டு வீடியோக்கள் காட்சிப்படுத்தப்பட்டது. ஒரு வீடியோவில் மத்திய அரசு செய்த மேம்பாட்டுப் பணிகள். மாநில அரசுகள் செய்த ஊழல் இரண்டாவது வீடியோவில் இடம்பெற்றது. இந்த வீடியோ மூலம், பாஜக அல்லாத மாநிலங்களில் மத்திய அரசின் உதவியுடன் எப்படி வளர்ச்சிப் பணிகள் செய்யப்படுகின்றன என்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த முறை அதிக இடங்களை வென்று அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்" என்று குறிப்பிட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய அரசின் வரி வசூலில் 32 சதவீதம் வங்காளத்துக்கு வழங்கப்பட்டதாகவும், ஆனால் மோடி அரசு வந்த பிறகு 32 லிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டதாகவும் எம்பி சுகந்தா மஜும்தார் தெரிவித்தார். கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் வியூகம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று கூறினார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டம் என்பது, பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
என்.டி.ஏ கூட்டத்தொடர், ஜூலை, 31 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தல், கூட்டணியின் பலம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் வெற்றிக்கான மந்திரத்தை முன்வைத்த பிரதமர் நரேந்திர மோடி, எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு முடிந்தவரை சென்று, மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.