நீதிபதியின் பாலியல் வீடியோ:
டெல்லி ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி ஒருவர், சக பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்துகொள்ளும் வீடியோ கடந்த வாரம் வெளியானது. சமூக வலைதளங்களில் இது பெரும் பேசுபொருளான நிலையில், நீதிபதிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தினர்.
தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்:
இந்நிலையில், ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி தனது அறையில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தொடர்பான, ஆட்சேபகரமான வீடியோ குறித்த ஊடகச் செய்திகளை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ரேகா ஷர்மா, டெல்லி உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவு:
அதில், குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையைக் வழங்கக் கோரியும், குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் நீதிபதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போஷ் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி, ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பாலியல் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க உள்குழு உள்ளதா என்பதை தெரிவிக்கும்படியும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் தெரிவிக்கவும், தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை:
முன்னதாக, நீதிபதியின் வீடியோ காட்சிகளை வெளியிடுவதைத் தடுக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்ந்தவரின் விவரங்கள் தெரியாத நிலையில், பாலியல் தன்மை மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் தனியுரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அந்த வீடியோவை பரப்புவதை நிறுத்த வேண்டும் என, விசாரனைக்கு பின்பு நீதிபதி யஷ்வந்த் வர்மா உத்தரவிட்டார். இது தொடர்பாக அனைத்து ஆன்லைன் செய்திகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 9ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
நீதிபதி மீது நடவடிக்கை:
இதனிடையே, ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் மூத்த கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவர் தனது அதிகாரப்பூர்வ அறையில், நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டது குறித்து, டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, மற்ற நீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்தார். அதைதொடர்ந்து, நீதிபதி மற்றும் அந்த பெண் சார்பிலான விளக்கத்தை கேட்ட பிறகு, குறிப்பிட்ட நீதிபதியும் அந்த பெண் ஊழியரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.