குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடி வாக்களர்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
குஜராத் சட்டப்பேரவைக்கான இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இந்தத் தேர்தல் களத்தில் 883 வேட்பாளர்கள் உள்ளனர். 2 கோடியே 54 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில், சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 26,409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 36,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அகமதாபாத், சபர்மதி தொகுதியைச் சேர்ந்த நிஷான் பள்ளியில் பிரதமர் மோடி வாக்காளர்களுடன் வாக்காளர்களாக வரிசையில் நின்று இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத் நரன்புராவில் உள்ள அங்கூர் தொகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் தனது வாக்கினைப் பதிவு செய்கிறார். அதேபோல், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அகமதாபாத்தில் உள்ள ஷிலாஜ் தொடக்கப் பள்ளியில் வாக்களிக்க உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. 1995ஆம் ஆண்டுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் ஆட்சி அமைக்கவே முடியவில்லை. ஆனால் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது. பல ஆண்டுகளாகவே, கிராமப்புரங்களை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி வலுவாகக் காணப்படுகிறது.
குஜராத் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஆளும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், குஜராத் அரசியலில் புதிதாக குதித்துள்ள ஆம் ஆத்மி ஆகியவை ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து தாக்கி கொண்டனர். இருப்பினும், கடந்த தேர்தலை காட்டிலும், இந்த தேர்தலில் பிரச்சாரம் சற்று மந்தமாகவே இருந்தது.