தேசிய குற்ற ஆவண காப்பக தகவல் படி, கடந்த 2020ல் தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில், பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகள்தொடர்பாக மொத்தம் 1,527 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


2019-ஆம் ஆண்டுடன் இதனை ஒப்பிடுகையில், சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்படும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 


குற்றங்கள் அதிகரித்துள்ளது:   


இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து இருப்பதன் வாயிலாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் தொடர்பாக புகார்கள்   பெருமளவில் உயர்ந்துள்ளன. தேசிய குற்ற ஆவணங்கள் மையத்தின் ஆய்வுப்படி கடந்த 2019 ஆம் ஆண்டு 486 ஆக இருந்த இணையதள குற்றங்களின் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டு 1,527 ஆக உயர்ந்துள்ளது. இதில், பெரும்பாலும் கொரோனா இரண்டாவது அலையில் உணவுப் பொருள் பற்றாக்குறை, ஆக்சிஜன் மற்றும் மருத்துவ படிக்கை பற்றாக்குறை உள்ளிட்ட பொய் செய்திகள் அதிகரித்து காணப்படுகிறது.     


மேலும், சமீபதிய ஆய்வுப்படி,  கடந்த 2019 ஆம் ஆண்டு 51,56,158  ஆக இருந்த பிடியியல் குற்றங்களின் (Cognizable offences) எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டு 66,01,285 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 28% விழுக்காடு அதிகமாகும். இருந்தாலும் , கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாதது, முகக் கவசங்கள் அணியாதது போன்றவை இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 


பட்டியல் சாதி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள்: பட்டியல் சாதி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள், பட்டியலின பழங்குடி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. 2020ல் பட்டியல் சாதி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள்  50,291 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது, 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.4% அதிகமாகும்.     


பெண்கள் மற்றும் குழந்தைகள்: 2019ம் ஆண்டு கொரோனா பொது முடக்கம் தொடங்கியதிலிருந்தே, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால், தற்போது இத்தகைய குற்றங்கள் குறைந்துள்ளன. 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ல் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 8.3 சதவிகிதமாக குறைந்துள்ளது.     


முன்னதாக, குடும்ப வன்முறைகள் பற்றி புகார் அளிக்க, தேசிய பெண்கள் ஆணையம்  7217735372  என்ற வாட்ஸ் ஆப் எண்ணை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதில் பெறப்பட்ட புகார்கள் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.


அதேபோன்று, 2020ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றச்சாட்டு தொடர்பாக 1,28,531  புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது, 2019 உடன் ஒப்பிடுகையில் 13.2% குறைவானதாகும். .