பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது 40க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணவர் பெயர் ரூப்சந்த் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு
பொதுவாக அரசு ஆவணங்களில் பல நேரங்களில் ஏற்படும் குளறுபடிகளால் புகைப்படம், பாலினம், வயது, பெயர், கணவர் அல்லது அப்பாவின் உறவுமுறை என அனைத்து அடையாளங்களும் மாறிவிடும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதேசமயம் நேரடி ஆய்வுக்கு வரும்போது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் போலியான அடையாளங்களும் வெளிவருவது உண்டு. இப்படியான நிலையில் பீகாரில் 40 பெண்கள் தங்கள் கணவரின் பெயர் என ஒரே பெயரை கொடுத்துள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மக்களின் பொருளாதார, சமூக பின்னணிகளுக்கு ஏற்ப வளர்ச்சி திட்டங்களை வகுக்க முடியும் என்ற அடிப்படையில் அரசு முழுவீச்சில் இந்த திட்டத்தை கையிலெடுத்து வருகிறது. இதற்காக மாநில பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 17 பிரிவுகளின் கீழ் இந்த கணக்கெடுப்பானது நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அர்வால் நகர சபை பகுதியின் வார்டு எண் 7ல் நடந்துள்ளது. இந்த பகுதியில் சிகப்பு விளக்கு எனப்படும் விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளர்கள் வசித்து வரும் நிலையில், அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது 40 பெண்கள் தங்கள் பெயரை ரூப்சந்த் என பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. இதேபோல் சில குழந்தைகளும் தங்கள் அப்பா பெயரை ரூப்சந்த் என பதிவு செய்துள்ளனர். இது மாநில மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
யார் இந்த ரூப்சந்த்?
இங்கு வசிக்கும் பெண்களை பொறுத்தவரை ரூப்சந்த் என்பது ஒரு ஆண் இல்லை. பணத்தை தான் ரூப்சந்த் என அழைக்கின்றனர். அதனைத் தான் தங்களுடைய எல்லாமுமாக பெண்களும், குழந்தைகளும் கருதுகின்றனர். அதனால் தான் ரூப் சந்த் பெயரை கூறுகிறார். இந்த பகுதியில் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த பலர் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: PTR Clarifies : ஆடியோவில் உள்ள குரல் யாருடையது..? தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..