சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையினர் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
நக்சல் தாக்குதல்:
தண்டேவாடா(Dantewada) மாவட்டத்தின் அரன்பூர் பகுதியில் துணை ராணுவப் படையினர் மீது குறிவைத்து நக்சல்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரன்பூர் அருகே DRG பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது நக்சல்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 10 துணை ராணுவப் படை வீரர்களுடன், ஓட்டுநர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக மாநில அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் இரங்கல்:
இந்த தாக்குதல் குறித்து மாநில முதலமைச்சர் பூபேஷ் பகேல் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்செயலை செய்த நக்சலைடுகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தியாகதிற்கு மாநிலம் மரியாதை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோலவே முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் தீவிவரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்
5 வீரர்கள் வீர மரணம்
எதிர்பாராத நேரத்தில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில், ராணுவ வாகனத்தில் இருந்த ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவை சேர்ந்த வீரர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராணுவம் உறுதி
முன்னதாக தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அத்துடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரு வீரர் ராஜ்புரியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கனமழை மற்றும் மோசமான வானிலையை பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தானாகவே தீப்பிடித்து எரிந்ததாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால், சிறிது நேரம் கழித்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ராணுவம் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
சிக்கிம் விபத்து:
அண்மையில், சிக்கிம் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் ராணுவ டிரக் சாலை விபத்தில் சிக்கி 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதேபோன்று, கடந்த 2021ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த ராணுவ வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்ததில் மூன்று வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க..