ஹரியானா முதலமைச்சர் பதவியில் இருந்து மனோகர் லால் கட்டார் விலகிய நிலையில், புதிய முதலமைச்சராக நைப் சிங் சைனி தேர்வாகியுள்ளார்.
ஹரியானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.
ஹரியானா அரசியல் சூழல்:
கடந்த 2014ஆம் ஆண்டு, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்த நிலையில், கடந்த முறை அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
ஏற்கனவே முதலமைச்சராக பதவி வகித்து வந்த மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகவும் ஜனநாயக ஜனதா கட்சியின் நிறுவனர் துஷ்யந்த் சவுதலா துணை முதலமைச்சராக பொறுப்பேற்றனர். அங்கு, நான்கரை ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக உடன் ஜனநாயக ஜனதா கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதில் சுமூகமான முடிவுகள் எட்டப்படாததால், இருகட்சிகள் இடையேயான கூட்டணி முறிந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாஜக அரசுக்கான தனது ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி திருமப்பெற முடிவு செய்தது. இதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்:
அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மாநில புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இறுதியில், குருக்ஷேத்ரா நாடாளுமன்ற உறுப்பினர் நைப் சிங் சைனி புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவர், மனோகர் லால் கட்டாருக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானா பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
சைனியின் அரசியல் வாழ்க்கை ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஹரியானாவில் பாஜகவை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தார். கடந்த 2002ஆம் ஆண்டு, அம்பலாவில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2005ஆம் ஆண்டு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த சைனி, விவசாயிகள் பிரிவு உட்பட கட்சியின் பல பதவிகளில் இருந்துள்ளார். கடந்த 2012 இல், அம்பாலா மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் பல பதவிகள் வகித்ததை தொடர்ந்து, 2014 மாநிலத் தேர்தலில் நாராயண்கரில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016இல் மாநில அமைச்சராக பதவியேற்றார்.