Haryana CM: ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஹரியானா முதலமைச்சர் ராஜினாமா:
அதைதொடர்ந்து, அவரது தலைமையிலான அனைத்து அமைச்சர்களும், கூண்டோடு பதவி விலகியுள்ளனர். எதிர்வரும் மக்களவை தேர்தலில் மனோகர் லால் கட்டார் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் ஜனநாயக் ஜனதா கட்சி உடனான கூட்டணி முறிந்ததன் காரணமாகவே, மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சுயேச்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக ஆலோசனைகளை தொடங்கியுள்ளது. அதில், நயாப் சைனி அல்லது சஞ்சய் பாட்டியா ஆகிய இருவரில் ஒருவர், புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஹரியானா சட்டமன்ற பெரும்பான்மை:
90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டமன்றத்திற்கு, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் பாஜக 40 இடங்களை கைப்பற்றியது. ஆனால், பெரும்பான்மைக்கான போதிய உறுப்பினர்கள் இல்லாததால், 10 எம்.எல்.ஏக்களை கொண்டிருந்த ஜேஜேபி உடன் தேர்தலுக்கு பிந்தையை கூட்டணியை பாஜக அமைத்தது. ஜேஜேபியின் தலைவரும், இணை நிறுவனருமான துஷ்யந்த் சவுதாலா, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக உடன் ஜேஜேபி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதில் சுமூகமான முடிவுகள் எட்டப்படாததால், இருகட்சிகள் இடையேயான கூட்டணி முறிந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஜேஜேபி அரசுக்கான தனது ஆதரவை திருமப்பெற முடிவு செய்துள்ளது. இதன்னை முன்னிட்டே, பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், ஹரியானாவில் உள்ள 10 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
புதிய கூட்டணி:
ஜேஜேபி தனது ஆதரவை திரும்பப் பெற்றாலும், தற்போது பாஜகவில் 41 உறுப்பினர்கள் உள்ளனர். அதுபோக, 7 சுயேச்சைகளும், ஹரியானா லோகித் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால், பாஜக இன்று மாலையே மீண்டும் பாஜகவில் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.
ஜேஜேபி எதிர்பார்ப்பு என்ன?
ஜேஜேபி கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலாவும் காலை 11 மணியளவில் டெல்லியில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் துஷ்யந்த் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது. தகவல்களின்படி, JJP தனது வேட்பாளர்களை ஹிசார் மற்றும் பிவானி-மகேந்திரகர் மக்களவைத் தொகுதிகளில் நிறுத்த விரும்புகிறது. ஹிசார் தொகுதியின் தற்போதைய எம்பி பிரிஜேந்திர சிங், அண்மையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.