நவராத்திரி என்றாலே விழாக்கலை வந்துவிடும். வீடுகளும் பூஜைகள், அலங்காரங்கள், கொலு நாட்கள், விதவிதமான பட்சனங்கள் என வீடும் களைகட்டும்.


நவராத்திரி அல்லது தமிழில் 9 இரவுகள் என்பது லக்‌ஷ்மி, துர்கா, சரஸ்வதி என முப்பெருந் தேவியருக்காகவே கொண்டாடப்படுகிறது. லக்‌ஷ்மி ஐஸ்வர்யத்துக்காகவும், சரஸ்வதி கல்வி ஞானத்துக்காகவும், துர்கா வீரத்துக்காகவும் கொண்டாடப்படுகின்றனர். தென்னிந்தியாவில் நவராத்திரி மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது.


கேரளாவில் எப்படிக் கொண்டாடுகிறார்கள்?


கேரள மாநிலத்தில் பூஜவைப்பு என்ற நிகழ்வுடன் நவராத்திரி தொடங்குகிறது. துர்காஷ்டமி நாளில் மாலை நேரத்தில் இது கொண்டாடப்படுகிறது. அடுத்த நாள் மஹாநவமி அன்று சரஸ்வது பூஜை அல்லது ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புத்தகங்கள், தொழிலுக்கான சாதனங்கள், வாகனங்கள் பூஜை செய்யப்படுகின்றன. அடுத்த நாள் விஜயதசமி, பூஜைஎடுப்பு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி செய்யப்படுகிறது. அரிசி, மணலில் எழுத்துகளை எழுத வைக்கின்றனர்.


தமிழ்நாட்டில் கொஞ்சம் வித்தியாசம் தான்:


தமிழகத்தில் நவராத்திரியின் 9 நாட்களையும் லக்‌ஷ்மிகு 3 நாட்கள், சரஸ்வதி, துர்கைக்கு தலா 3 நாட்கள் எனக் கொண்டாடுகின்றனர். வீட்டில் கொலுவைத்து அதில் விதவிதமான பொம்மைகளை வைத்து கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாளும் பூஜை செய்து, பஜனை பாடி, வீட்டுக்கு விருந்தினர்களை அழைத்து விதவிதமான உணவுகளை வழங்குவதோடு பரிசுப் பொருட்களையும் வழங்குகின்றனர். கோயில்களில் நடனம், இசைக் கச்சேரிகள் நடைபெறும். கோலாட்டம், கை சிலம்பாட்டம் என கோயில்களில் கொண்டாட்டத்துக்கு குறைவு இருக்காது.


கர்நாடகாவில் எப்படிக் கொண்டாடுகிறார்கள்?


கர்நாடகாவில் வீடுகளில் கொலு பொம்மைகள் வைப்பதோடு ஒருவொருக்கொருவர் தேங்காய், பண்டங்கள், துணிமணிகள் பரிமாறிக் கொள்கின்றனர். மூகாம்பிகை கோயிலுக்கு நவராத்திரி காலத்தில் போய்வருவது ஐதீகமாக இருக்கிறது. அதேபோல் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு நவராத்திரியில் பக்தர்கள் குவிகின்றனர். மஹிசாசுரன் என்ற அசுரனை வதம் செய்த துர்கையின் அவதாரம் தான் சாமுண்டீஸ்வரி. மைசூரு தசரா திருவிழாவுடன் நவராத்திரி விழாவும் இணைந்து கொள்ளும். மைசூரு அரண்மனை கண்கவர் அழகில் மிளிரும். தசரா யானைகளின் அணிவகுப்பு பிரசித்தி பெற்றது. சாமுண்டீஸ்வரி அம்மன் யானையில் ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.


தெலுங்கானா, ஆந்திராவில் நவராத்திரி:
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மஹா கவுரி விரதமாக நவராத்திரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. பதுக்கமா படுங்கா என்ற நிகழ்ச்சியை மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்வின்போது பெண்கள் அலங்காரமான தட்டில் மலர்களை அடுக்கி பூஜை செய்கின்றனர். கடைசியாக அந்தத் தட்டை நீர்நிலைகளில் மிதக்கவிடுகின்றனர்.இவ்வாறாக தென்னிந்தியாவில் நவராத்திரி விதவிதமாக கடைபிடிக்கப்படுகிறது.