தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தலைவி, தாம் தூம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவாத் தனது பெயரை பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக பிரபல எழுத்தாளர் ஜாவித் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.


அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் கங்கனா ரனாவத் காலம் தாழ்த்தி வந்தார். கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பினார். நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தார் மாஜிஸ்திரேட். ஆனால், தனக்கு கொரொனா அறிகுறி இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனா அவர் தெரிவித்தார். இதனை அடுத்து கடந்த 14 ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றார்.


இந்த நிலையில், தன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் ஜாவித் அக்தர் மீது எதிர் வழக்கு தொடர்ந்த கங்கனா ரனாவத், ஜாவின் அக்தர் பணம் பறிக்கும் நோக்கத்தில் தன்னிடம் மிரட்டியதாக தெரிவித்திருந்தார். அந்த மனு குறித்து கங்கனாவின் வழக்கறிஞர் அளித்த விளக்கமாவது, ”ஜாவித் அக்தர் மீது கங்கனா அளித்துள்ள புகார் புதிது அல்ல. 3 அல்லது 4 ஆண்டுகள் முன் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ஜாவித் அக்தர் இல்லத்துக்கு அழைக்கப்பட்டனர். அங்கு இருவரையும் ஜாவித் அக்தர் மிரட்டியுள்ளார். இதை பல முறை அவர் தெரிவித்து இருக்கிறார். இருந்தாலும் ஜாவித் அக்தரின் வயதை கருத்தில் கொண்டு புகாரளிக்கவில்லை. ஆனால், இப்போது இந்த வழக்கில் அவர் தீவிரமாக இறங்கி இருக்கிறார். அவருக்கு குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளனர்.” என்றார்.



ஜாவித் அக்தரின் வழக்கை விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் மீது தனக்கு நம்பிக்கை இல்லாததால் அவரையும் மாற்ற வேண்டும் எனவும், அல்லது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கங்கனா தனது மனுவில் கோரினார். இந்த வழக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட மும்பை நீதிபதி, மாஜிஸ்திரேட்டின் வழக்கு விசாரணையில் எந்த தவறும் நடைபெறவில்லை எனக்கூறி கங்கனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.


இந்த நிலையில், கங்கனா ரனாவத்தின் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என எழுத்தாளர் ஜாவித் அக்தர் மும்பை நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையை தள்ளிப்போடுவதற்காவும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நழுவிச் செல்வதற்காகவும் கங்கனா ரனாவத் தன்னை துன்புறுத்தும் வகையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக ஜாவித் அக்தர் கூறியுள்ளார்.