ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. தேசிய சுகாதார ஆணையம் (NHA) அறிமுகம் செய்த ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிந்த அதே நாளில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை அறிமுகம் செய்தார் மோடி. அப்போது இந்தியாவின் சுகாதார வசதிகளில் புரட்சிகர மாற்றங்களை இத்திட்டம் ஏற்படுத்தக்கூடியது என்று அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் தனித்துவமான டிஜிட்டல் ஹெல்த் ஐடி ஏற்படுத்தப்படும்.
ஹெல்த் ஐடி என்றால் என்ன?
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின் பலன்களைப் பெற அனைவரும் ஆதார் எண் அல்லது மொபைல் எண் மூலம் பதிவு செய்து 14 இலக்கு ஹெல்த் ஐடியைப் பெறலாம். மேலும் அதற்கான ஆப்பினையும் பயன்படுத்தி உடல்நலன் சம்பந்தப்பட்ட பழைய ஹெல்த் ரெக்கார்டுகளை அறிந்துகொள்ளலாம்.. இது ஒருவரின் அனைத்து சுகாதார பதிவுகளின் களஞ்சியமாகவும் ஹெல்த் ஐடி இருக்கும். அதே போல இந்த டிஜிட்டல் ஹெல்த் ஐடியில் ஒருவருக்கு என்னென்ன நோய் உள்ளது, கடைசியாக மருத்துவரைக் காண சென்றது எப்போது, செய்யப்பட்ட டெஸ்ட் குறித்த விபரங்கள், சிகிச்சையளித்த மருத்துவமனை, மருத்துவர், வழங்கப்பட்ட மருந்து உள்ளிட்ட உடல்நலன் சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களும் இருக்கும். நோயாளியின் ஹெல்த் விபரங்கள் அனைத்தும் எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்டில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் ஒருவருக்கு சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு நோயாளியின் உடல்நலன் குறித்த முழுமையான விபரங்களை மருத்துவர்கள் அறிந்துகொள்ள முடியும்.
ஹெல்த் ஐடியை உருவாக்குவது எப்படி?
1. தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும் https://healthid.ndhm.gov.in/register
2. ஹெல்த் ஐடி பிரிவுக்கு செல்ல வேண்டும்
3.ஹெல்த் ஐடியை உருவாக்குக எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
அதிலிருந்து மூன்று உள்நுழைவு விருப்பங்களுடன் நீங்கள் வேறு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
a) ஆதார்
b) ஆதார் இல்லை அல்லது ஆதாரைப் பயன்படுத்த வேண்டாம்
c) பதிவு செய்த பயனர்
ஆகியவற்றில் ஒன்றை க்ளிக் செய்து உள்நுழைய வேண்டும்.
ஆதாரை பயன்படுத்தி உள்நுழைய முதல் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அல்லது ABMD Health Records எனும் app மூலமாகவும் உள்நுழைந்து விபரங்களை பதிவு செய்து ஹெல்த் ஐடியைப் பெறலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை:
தற்போது, மொபைல் எண் அல்லது ஆதார் எண் மூலம் ஹெல்த் ஐடி உருவாக்கலாம் என ஏபிஎம்டி தெரிவித்துள்ளது. பெயர், பிறந்த ஆண்டு, பாலினம், முகவரி, மொபைல் எண் அல்லது ஆதார் எண் போன்ற விவரங்களை ஒருவர் பதிவு செய்யவேண்டும். விரைவில் பான் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைக் கொண்டும் பதிவு செய்யும் வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாக, இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார பதிவுகளின் தனியுரிமை (Privacy) அரசால் காக்கப்படுமா?
பயனாளியின் எந்த சுகாதார பதிவுகளையும் ஏபிஎம்டி சேமிக்காது என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. நோயாளியின் பதிவுகள் சுகாதார தகவல் வழங்குநர்களிடம் இருக்கும் எனவும் பயனாளியின் ஒப்புதலுக்குப் பிறகுதான் என்க்ரிப்டட் (encrypted) வடிவத்தில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் நெட்வொர்க்கில் பகிரப்படுகின்றன என்றும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹெல்த் ஐடியை நீக்கம் (delete) செய்ய முடியுமா?
பயனாளிகளுக்கு 2 ஆப்ஷன்கள் உள்ளன. ஹெல்த் ஐடியை நிரந்தரமாக டெலிட் செய்வது மற்றும் தற்காலிகமாக செயலிழக்க செய்வது (Temporary deactivate). ஹெல்த் ஐடியை நிரந்தரமாக நீக்கினால் அனைத்து விதமான தகவல்களும் உடனே அழிக்கப்படும். மேலும் எதிர்காலத்தில் இந்த ஐடியை பயன்படுத்தி எவ்வித தகவல்களையும் பெற இயலாது. தற்காலிகமாக செயலிழக்க செய்தால் மீண்டும் ரீஆக்டிவேட் செய்வது வரை பயனாளி ஐடியைப் பயன்படுத்த முடியாது.
இதில் ஏதேனும் புதிய அம்சங்கள் சேர்க்கப்படுமா?
நாடு முழுவதும் எந்த மருத்துவரையும் அணுகுவதற்கான வாய்ப்பு
பிறந்ததிலிருந்தே குழந்தைகளுக்கும் சுகாதார ஐடி
சுகாதார பதிவுகளை காண கூடுதலான நாமினியை சேர்க்கலாம்
மொபைல் போன் வசதி இல்லாதவர்களுக்கும் பயன்படுத்த வசதி ஆகிய அம்சங்கள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மருத்துவமனைகளில் நடைமுறைகளை எளிமையாக்குவதோடு வாழ்க்கையிலும் எளிமையை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே இத்திட்டம் உள்ள நிலையில் நாடுமுழுவதும் பரவலாக்கபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.