மும்பையில் பட்டியிலின இளைஞரின் முகத்தில் உமிழ்ந்த போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


நவி மும்பையைச் சேர்ந்த 28 வயது பட்டியிலன இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அந்த நபரை சாதி ரீதியாக தரக்குறைவாக விமர்சித்த அந்த காவல் அதிகாரி இன்னும் கொடூரமான செயலிலும் ஈடுபட்டார். காவலர் தான் அணிந்திருந்த காலணியை அந்த இளைஞரை தனது நாவால் நக்கி சுத்தம் செய்யுமாறு துன்புறுத்தியுள்ளார். மூன்று நாட்கள் அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நடந்தது என்ன?


பாதிக்கப்பட்ட இளைஞரின் பெயர் உஜ்கரே. இவர் கலம்போலி காவல் நிலையத்தில் சைபர் குற்றம் ஒன்றில் தன்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். ஆனால் அந்தப் புகாரை ஏற்க கம்போலி காவல் நிலையம் முன்வரவில்லை. இதனையடுத்து அவர் உயரதிகாரிகளை அணுகி புகார் தெரிவித்தார். இதனால் கலம்போலி காவல் நிலைய அதிகாரிகள் உஜ்கரே மீது கடுமையான அதிருப்தியில் இருந்துள்ளனர்.


 


இதுகுறித்து அந்த இளைஞர் கூறுகையில், “கடந்த ஜனவரி 6ஆம் தேதியன்று சீன உணவகம் ஒன்றில் நான் எனது நண்பருடன் இருந்தேன். அப்போது அந்த உணவக உரிமையாளர் என் நண்பரை தாக்கினார். உடனே நான் போலீஸுக்கு தகவல் கொடுத்தேன். உடனே சிறிது நேரத்தில் கலம்போலி போலீஸார் அங்கு வந்தனர்.


அவர்கள் என்னை தாக்கினர். நான் காயமடைந்தேன். என்னை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லச் சொன்னேன். அவர்கள் பான்வெல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் என்னை வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் அதிகாரிகள் என்னை கலம்போலி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அதிகாரி பாட்டீல் வந்தார். அவர் என்னை அறைந்தார். பின்னர் என் முகத்தில் உமிழ்ந்தார். அவரது காலணியை என் நாக்கால் சுத்தம் செய்ய வைத்தார்” என்று கூறினார்.


நாடு ஒரு புறம் உலகப் பணக்காரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சமூக கட்டமைப்பு ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் ஒடுக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. மும்பையில் இப்படி ஒரு சம்பவம் என்றால். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை வேங்கைவயலில் அண்மையில் நடந்த சம்பவத்தைக் கூறலாம். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத்தொட்டி குடிநீரில் மனித மலம் கொட்டிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்:


கடந்த 2022 புள்ளிவிவரத்தின்படி தமிழ்நாட்டில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 5,916 வழக்குகள் நீதிமன்றத்திலும் 570 வழக்குகள் காவல்துறை விசாரணையிலும் நிலுவையில் உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் தெரிய வந்துள்ளது. குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்கானிப்பு குழு ஆர்.டி.ஐ சட்டம் மூலம் கடந்த நவம்பர் மாதம் வரை இந்த தகவல்களைப் பெற்று தொகுத்துள்ளனர்.


மேலும், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளில் 11% வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்படுகின்றன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 5,916 வழக்குகளில் அதிகபட்சமாக 835 வழக்குகள் திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்திலும் அதற்கு அடுத்தபடியாக 678 வழக்குகள் மதுரை சிறப்பு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.


எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாநில அளவில் முதல்வர் தலைமையில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டும்.