ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டம், 1860க்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 


புதிய சட்டங்கள்:


இந்திய ஆதார சட்டம், 1872க்கு பதில் பாரதிய சாக்சியா (இரண்டாவது) என்ற பெயரிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898க்கு பதில் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா என்ற பெயரிலும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய குற்றவியல் சட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சர்ச்சைக்கு உள்ளான தேசத்துரோக சட்டப்பிரிவுகள் புதிய சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 


நாட்டுக்கு எதிராக செய்யப்படும் செயல்கள் அனைத்துக்கும் கடும் தண்டனை வழங்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 


புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிராக டிரக் ஓட்டுநர்கள் போராடுவது ஏன்?


அந்த, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்துக்கு எதிராக டிரக், பேருந்து ஓட்டுநர்கள், டேங்கர் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தேசிய அளவில் வேலை நிறுத்தம் அறிவித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.


பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்படி, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி கடுமையான சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு, காவல்துறையினருக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்காமல் தப்பி ஓடும் வாகன ஓட்டிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 7 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரக் ஓட்டுநர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் தேசிய அளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. டிரக்கின் மூலமாகத்தான் பெட்ரோல், டீசல் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. தற்போது, ஓட்டுநர்கள் அறிவித்த போராட்டத்தால் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில், மத்திய அரசின் சார்பில் டிரக் ஓட்டுநர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் போராட்டம் தற்காலிக வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.


ஸ்தம்பித்து போன வட மாநிலங்கள்:


மகாராஷ்டிராவில் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக மத்திய பிரதேசத்திலும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் டிரக் ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என அஞ்சி பல்வேறு நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


இதற்கிடையில், இமாச்சலத்தின் சிம்லா மற்றும் தரம்ஷாலாவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் வாங்க வேண்டியிருந்தது. மும்பை பெட்ரோல் டீலர்கள் சங்கத்தலைவர் சேத்தன் மோடி, இதுகுறித்து கூறுகையில், "நேற்று முதல் ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. பெட்ரோல் நிலையங்களில் நேற்று முதல் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கின. சப்ளை கிடைக்காவிட்டால், இன்று முதல் பெரும்பாலான பம்புகளில் எரிபொருள் தீர்ந்துவிடும்" என்றார்.                         


இந்த சூழலில் போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளதால் நாளை முதல் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது என ஏற்கனவே டீலர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.