பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.


எதிர்பார்ப்பை கிளப்பிய ராமர் கோயில் கும்பாபிஷேகம்:


கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்‌ஷய் குமார் மற்றும் பிரபல இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஶ்ரீராம ஜென்மபூமி  தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். அதுமட்டும் இன்றி, நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.


இபிஎஸ், ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு:


சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி காந்தின் இல்லத்துக்கு சென்ற ஆர்.எஸ்.எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார்,  தென்பாரத மக்கள் செயலாளர் (மக்கள் தொடர்பு) பிரகாஷ், மாநில இணைச்செயலாளர்  (மக்கள் தொடர்பு) ராம ராஜசேகர், மாநகர பொறுப்பாளர் ராம்குமார் மற்றும் பாஜக, சமூக ஊடகப் பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர்.


 






இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பரபரப்பை கிளப்பி வந்த அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 


மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என பொது மக்களை பிரதமர் மோடி சமீபத்தில் கேட்டு கொண்டார்.